அரசியல்உள்நாடு

வற் வரியில் இருந்து விடுவிப்போம் – அனுர

கல்வி, சுகாதாரம், உணவு ஆகியவற்றை வற் வரியில் இருந்து விடுவிப்போம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் – அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் மீது அதிக வரிச்சுமை இருக்கிறது. நேரில் வரி, நேர் வரி இரண்டுமே அதிகரித்துள்ளது. இந்த வரியை நீங்கள் குறைக்கப் போகிறீர்களா? நீக்கப் போகிறீர்களா? நிவாரணம் வழங்கப் போகிறீர்களா? உங்களுடைய வேலைத்திட்டம் என்ன? என தொலைக்காட்சி நேர்காணலொன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கேள்விக்கு மேலும் பதிலளித்த அநுரகுமார திஸாநாக்க,

நாம் இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள்ளே இருக்கிறோம். 2025 ஆம் ஆண்டாகும் போது எமது முதனிலை கணக்கின் மிகைநிலை 2.3 சதவீதமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆகவே, இந்த நிகழ்ச்சி நிரல் ஓடிக்கொண்டிருக்கும் ஆட்சிதான் எங்களுக்குக் கிடைக்கும். ஆகவே, முதலாவதாக நாங்கள் முதனிலை கணக்கின் மிகைநிலையை 2.3 சதவீதமாக வைத்துக்கொள்வோம். அதற்காக, எமது வருமானத்தை அதிகரித்து செலவினை குறைக்க முடியும் அல்லது செலவினை அவ்வாறே வைத்துக்கொண்டு வருமானத்தை அதிகரிக்க முடியும்.

எங்களுடைய பிரதான இலக்கு வருமானத்தை அதிகரித்துக் கொள்வதாகும். இப்பொழுதும் திறைசேரிக்கு வந்து செரவேண்டிய பணம் திறைசேரிக்கு வராமல் வேறு பாதையில் சிலரின் வீடுகளுக்குச் சென்றுக்கொண்டிருக்கிறது. ஆகவே, இந்தப் பணத்தை நாங்கள் முழுமையாக திறைசேரிக்கு கொண்டு வருவோம்.

இரண்டாவது, திறைசேரியில் இருக்கும் பணத்தை நாங்கள் இந்த நாட்டு மக்களின் தெய்வீக உடைமைகளைப் போல பேணிப் பாதுகாப்போம்.  ஒரு ரூபாவைக் கூட வீணாக்க இடமளிக்கமாட்டோம்.

மூன்றாவது, நமக்கிருக்கும் வருமான சாத்தியவளங்களை நோக்குகையில, சுங்கவரித் திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், குடிவரவு, குடியகல்வு திணைக்களம், மதுவரித் திணைக்களம் என்பன இருக்கின்றன. இவை தான் பிரதானமான வருவமான சாத்திய வளங்கள் ஆகும்.

நாங்கள் தொலைவில் இருக்கும் பாடசாலை ஒன்றிற்குச் சென்று நூலகம் இருக்கிறதா என்று பார்க்கப் போவதில்லை. நூலகத்தில் புத்தகங்கள் இருக்கிறதாக என்று பார்க்கப் போதவில்லை. அந்தக் கிராமத்தில் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கிறதா என்று நாங்கள் விசாரிக்கப் போவதில்லை. அதற்குப் பொறுப்பான அரசு இயந்திரமொன்று இருக்கிறது.

கிராம பாடசாலைகளுக்குச் சென்று விளையாட்டு மைதானம் இருக்கின்றதாக என்று பார்க்க வேண்டுமா? இசுருபாயவில் எல்லா பாடசாலைகள் பற்றிய விபரங்களும் இருக்கின்றன. ஆகவே, அரச உத்தியோகத்தர்களை வாரக்கணக்கில் நிறுத்தி வைத்து நாங்கள் வேலை செய்யப்போவதில்லை.

நாங்கள் இந்த நாட்டில் இருக்கின்ற வருமான சாத்திய வளங்களை, அதாவது சுங்கவரித் திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் மதுவரித்திணைக்களத்தை வினைத்திறனுடையதாக்கி, நெருங்கிய அரசியல் தலைமைத்துவத்தை அவற்றுக்கு வழங்கி, அவர்களுடன் கலந்துரையாடி, இந்த வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்.

இப்பொழுதும் சுங்கவரித் திணைக்களத்தின் உள்ளே இருக்கும் உத்தியோகத்தர்களுடன் நாங்கள் ஆழமாக கலந்துரையாடியிருக்கிறோம். அவர்கள் இரண்டு, மூன்று மாதங்களுக்கான கணக்குகளை கணக்கிட்டு தந்திருக்கிறார்கள்.

வருமானத்தை அதிகரித்துக் கொள்வது தொடர்பான இலக்கை எட்டக்கூடிய வகையில் அந்தக் கணக்குகளை கணக்கிட்டு தந்திருக்கிறார்கள். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் பற்றியும் நாங்கள் பேசியிருக்கிறோம்.

ஆகவே, நாங்கள் வருமானத்தை ஈட்டக்கூடிய மார்க்கங்களை உருவாக்கி, அதுப்போல வீண்விரயத்தை குறைத்து, 2.3 சதவீத முதனிலை கணக்கின் மிகைநிலையையும் வைத்துக்கொண்டு, நாட்டின் பிரஜைகளின் வரிச்சுமையையும் குறைத்து மற்றும் மக்களுக்கு நிவாரணத்தையும் வழங்கி  எம்மால் இதனை முகாமைத்துவம் செய்துகொள்ள முடியும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு சுமையாக மாறியுள்ள வெட் வரியை நிச்சயமாகக் குறைப்போம். குறிப்பாக, எமது நாட்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் உணவுக்கு வெட் வரி அறவிடப்பட்டிருக்கவில்லை. அதனால், நாங்கள் ஆரம்பக் கட்டத்திலேயே இம்மூன்றையும் வெட் வரியில் இருந்து விடுவிப்போம். இதுவரை வெட் வரி அறவிடப்பட்ட விசேட பிரிவுகளை விடுவிப்போம்.

நோய்வாய்ப்பட்டால் வைத்தியம் பார்க்க வேண்டும். அதற்கு அரசாங்கம் பணத்தை அறவிடு வேண்டுமா? பிள்ளைகள் கல்வி கற்க புத்தகங்கள் வேண்டும்.

அந்தப் புத்தகங்களுக்கு வரி அறவிட வேண்டுமா? பசியைப் போக்கிக்கொள்ள மரக்கறி வாங்கச் செல்லும்போது அதற்கும் வரி அறவிடு வேண்டுமா? இது நெறிமுறைக்கு புறம்பானது. ஒருவர் நோய்வாய்ப்பட்டால் வீட்டுக்குத் தொல்லையாகியிருக்கிறது.

அவரின் மருத்துச் செலவுகளுக்கும் வரி அறவிட வேண்டுமா? மரத்தில் இருந்து விழுந்தவரை மாடு முட்டிய கதைதான் இது. ஆகவே, இவ்வாறு அறவிடப்படுகின்ற வரி நியாயமானதல்ல.

நாங்கள் சரியாக வருமான இலக்குகளை முழுமைப்படுத்தி, மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமையை குறைப்பதற்கான வேலைத்திட்டத்தை நிச்சயம் முன்னெடுப்போம் என்று பதிலளித்துள்ளார்.

Related posts

மண்ணுக்காக போராடும் நாம் நீருக்காக போராடும் நிலை உருவாகும்

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோ நன்கொடை

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் புதிய அரசியல் கூட்டணி உதயம்.

editor