அரசியல்உள்நாடு

ரணிலின் பொருளாதார கொள்கையையே ஜனாதிபதி அநுர தொடர்கிறார் – நாமல்

ஆட்சிக்கு வந்தவுடன் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை மறுசீரமைப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார கொள்கையை எவ்வித மாற்றமுமில்லாமல் தொடர்கிறார்.

ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்திய மக்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசியல் ரீதியில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம். ஜனாதிபதித் தேர்தலில் போது எம்முடன் இருந்தவர்கள் குறுகிய அரசியல் தேவைகளுக்காக எம்மை விட்டுச் சென்றார்கள். அவ்வாறு சென்றவர்கள் இன்று அரசியலில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள்.

பொதுத்தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ளோம். ராஜபக்ஷர்கள் நாட்டுக்கு சேவையாற்றியுள்ளார்கள்.

ஆகவே பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி பதவியை பொதுஜன பெரமுனவுக்கு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களையும் விமர்சித்தார். ஆகவே இம்முறை அவர் அரசாங்கத்தை நிர்வகிக்கட்டும். அப்போது சொல்வது இலகு செய்வது கடினம் என்பதை அறிவார்.

ராஜபக்ஷர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்தவுடன் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை மறுசீரமைப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஆனால் பதவியேற்று ஓரிரு நாட்களில் நாணய நிதியத்துடனான செயற்திட்டத்தை எவ்வித மாற்றமுமில்லாமல் தொடர்வதாக நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.

நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்காக கடுமையான தீர்மானங்கள் அமுல்படுத்தப்பட்டதால் நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நடுத்தர மக்களின் நலனை கருத்திற் கொண்டு எவ்வித நடவடிக்கைகளையும் ஜனாதிபதி எடுக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார கொள்கையையே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கிறார்.

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கி வாக்குறுதிகளுக்கு அப்பாற்பட்ட வகையில் தான் ஜனாதிபதி செயற்படுகிறார்.

பொதுத்தேர்தலுக்கு பின்னர் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக குறிப்பிடுவது மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகும். வெறுப்பினை முன்னிலைப்படுத்தி கைப்பற்றிய ஆட்சியை சிறந்த முறையில் முன்கொண்டு செல்ல முடியாது என்றார்.

-இராஜதுரை ஹஷான்

Related posts

ஊடகவியலாளரிடம் மன்னிப்பு கோரினார் [UPDATE]

அட்மிரல் ரவிந்திர இன்றுடன் ஓய்வு

சீனி உட்பட 10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு – லங்கா சதொச