உள்நாடு

யாழ்.மாநகர முதல்வர் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது

(UTV | யாழ்ப்பாணம்) –  யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று அதிகாலை 1.45 அளவில் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண மாநகர சபையால் உருவாக்கப்பட்டுள்ள காவல்படை மற்றும் அதன் சீருடை என்பன தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நேற்று இரவு சுமார் 8 மணியளவில் அவர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டார். இதன்போது சுமார் 6 மணி நேர விசாரணையின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு 8ஆம் மாதம் 11ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானிக்கு அமைய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாக கருதப்படுகின்றது.

எனவே, அதனை ஊக்குவிக்கும் வகையில் செயற்படுதல், அல்லது சீருடை உள்ளிட்டவற்றை பயன்படுத்துதல் குற்றச் செயலாக கருதப்படும்.

இதற்கமைய யாழ்ப்பாண மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

நீர் கட்டண பட்டியலில் மாற்றம்!

பொது சுகாதார பரிசோதகரை தாக்கிய இருவர் கைது

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு