வகைப்படுத்தப்படாத

முஸ்லிம் அரசியலில் புதிய திருப்பம் – அமைச்சர் ரிஷாட், ஹஸனலி இணைந்து ”ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு” உருவாக்கம்…

(UTV|COLOMBO)-அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் முக்கியஸ்தர்களான பஷீர் சேகுதாவூத், ஹசன் அலி ஆகியோரின் தலைமையில் “தூய முஸ்லிம் காங்கிரஸ்”எனும் அணியாக இது கால வரை இயங்கி பின்னர், “ஐக்கிய சாமாதானக் கூட்டமைப்பு”எனும் பெயரில் உருவாக்கப்பட்ட கட்சியும் இணைந்து, “ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு” என்ற பெயரில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் நேற்று(10) காலை கொள்ளுப்பிட்டி, ரேணுகா ஹோட்டலில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டதுடன்,புதிய கூட்டமைப்பின் கொள்கைப் பிரகடனமும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், மற்றும் ஐக்கிய சாமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் ஹசன் அலி ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில், இரண்டு கட்சிகளின் பிரதானிகளும், புதிய கூட்டமைப்பை உருவாக்கியதற்கான நோக்கத்தையும் எதிர்கால முன்னெடுப்புக்களையும் வெளிப்படுத்தினர்.

புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவராக, முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர்களில் ஒருவரும், மூத்த அரசியல்வாதியும், மு.காவின் முன்னாள் செயலாளர் நாயகமுமான ஹசன் அலியை தாங்கள் ஏகோபித்து, தேர்ந்தெடுத்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவித்தார்.

மு.காவின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் எம்.ஏ.அன்சில், நிந்தவூர் பிரதேச சபைத் தலைவர் எம்.ஏ.எம்.தாஹிர், பொத்துவில் பிரதேச சபையின் பிரதித் தலைவர் தாஜுதீன், நிந்தவூர் பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான ரியாஸ், கலந்தர், வி.சி.ஸாலிஹ், அஸுமத் அலி மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களான ஏ.எல்.அப்துல் மனாப், டி.ஐ.ஜி.நசீர் ஆகியோரும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் சார்பில் பங்கேற்றிருந்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில், கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன், தவிசாளர் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் உட்பட மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டின் சமத்துவத்தை பேணும் வகையிலும், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் நோக்கிலுமே இந்த புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹசன் அலியும் தெரிவித்தனர்.

“ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அனைத்து சபைகளிலும் மயில் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு தெரிவித்ததுடன், தாம் தலைமை வகிக்கும் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆளுங்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் பங்காளிக் கட்சியாக இருப்பதனால் உள்ளூராட்சித் தேர்தலில் சில மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதோடு வேறு சில மாவட்டங்களில் தனித்தும் போட்டியிடுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடுவது தொடர்பிலும், ஆசனப் பங்கீடு தொடர்பிலும் ஐதேக தலைமையுடன், தமது கட்சி விரிவான பேச்சு வார்த்தைகளை நடாத்தி வருவதாகவும், அதன் பலா பலன்களை பொறுத்து எந்தெந்த இடங்களில் இணைந்து போட்டியிடுவது, எந்தெந்த இடங்களில் தனித்துப் போட்டியிடுவது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ஹசன் அலி கூறியதாவது,
இந்த நிகழ்வு வரலாற்றில் பதியப்பட வேண்டிய ஒன்றாகும். பாராளுமன்றத்தில் 05 எம்.பிக்களையும், மாகாண சபையில் பல உறுப்பினர்களையும், பிரதேச சபைகளில் தலைவர் மற்றும் உறுப்பினர்களையும் பெற்று, முஸ்லிம் அரசியலில் மிகப் பலமான கட்சியாக மிளிரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புதிதாக உருவாக்கப்பட்ட தங்கள் கட்சியுடன் கூட்டிணைந்துள்ளதுடன், அதன் தலைமைப் பதவியையும் தமக்கு வழங்கியிருப்பது, மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பெருந்தன்மையையே எடுத்துக் காட்டுகின்றது என்றார்.

பெரும்பாலான கட்சியின் தலைவர்கள் தமது கட்சிகளின் அரசியல் யாப்புக்களை மாற்றிக்கொண்டு, தமது அதிகாரத்தை வலுப்படுத்தி, தலைமையை பலப்படுத்தி வரும் இன்றைய காலகட்டத்தில் அமைச்சர் ரிஷாட், இன்னொருவருக்கு தலைமைப் பதவியை விட்டுக்கொடுத்துள்ளமை மெய்சிலிர்க்க வைக்கின்றதெனவும் கூறினார்.

தனது 32 வருடகால அரசியல் வாழ்வில் அமைச்சர் அஷ்ரபின் மறைவுக்குப் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் அழிவுப்பாதைக்கு சென்று கொண்டிருப்பதனாலேயே, சமூகத்துக்கான போராட்டத்தில் வெற்றி பெற புதிய வழி தேடி அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் கூட்டுச்சேர்ந்து தாமும் தமது கட்சியின் உறுப்பினர்களும் பயணிக்க தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான மேல் மாகாணபை உறுப்பினர் பாயிஸ், ஏ.எம்.ஜெமீல், கலாநிதி இஸ்மாயில், எஸ்.எஸ்.பி. மஜீத், சட்டத்தரணி ருஸ்தி ஹபீப், ஹுசைன் பைலா, எம் என் எம் நபீல் உட்பட பலர் பங்கேற்றனர்.

-சுஐப் எம் காசிம்-

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

மஹிந்தானந்தவின் கருத்தானது பாரதூரமானது : நாமலிடம் இருந்து Twitter பதிவு

යල කන්නයේ වගා හානි වන්දි සඳහා රුපියල් මිලියන පන්සිය පනස් හයක්

அலரிமாளிகையில் சசுநோதய