சனநெரிசல் கூடிய கல்முனை மாநகரத்தின் வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், கல்முனை மாநகரத்திற்கு வர்த்தக நோக்கத்திற்காக வரும் வெளியூர் வர்த்தகர்கள், பயணிகளின் அசௌகரியத்தை குறைக்கவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் முயற்சியின் பயனாக கார்பட் வீதியாக புனரமைக்கப்பட்ட நிந்தவூர்- பெரியநீலாவணையை இணைக்கும் மெரின் டிரைவ் கடலோரப் பாதை மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் டி-100 திட்டத்தின் கீழ் சுமார் 65 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கல்முனை மாநகர பிரதேசத்தை குறிப்பாக சாய்ந்தமருது, கல்முனை மற்றும் மருதமுனையை ஊடறுக்கும் இந்த மெரின் டிரைவ் திட்டத்தின் முதலாம் கட்டம் நிறைவடைந்துள்ளது.
இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய மீன் சந்தை உட்பட கடல்சார் வியாபார நிலையங்களை நிறையவே கொண்டுள்ள இப்பிராந்திய வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களின் நன்மை கருதி செய்யப்பட்ட இந்த அபிவிருத்தி திட்டமானது பிராந்திய பொருளாதார வளர்சிக்கும், மக்களின் இலகுவான போக்குவரத்துக்கும் உதவியாக அமைந்துள்ளது.
இப்பாதையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்து மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்பாதையின் பயன்பாடுகள் மற்றும் மேலதிக அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராய முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் அண்மையில் கள விஜயமொன்றை மேற்கொண்டு ஆராய்ந்தார்.
இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் மக்கள் தொடர்பாடல், ஊடக விவகார செயலாளர் நூருல் ஹுதா உமர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
-மாளிகைக்காடு செய்தியாளர்