அரசியல்உள்நாடுவீடியோ

மன்னார் – புத்தளம் பாதை முக்கியமானது – பாராளுமன்றத்தில் ரிஷாட் பதியுதீன் | வீடியோ

வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்படவில்லை என்ற நிலைப்பாட்டை ஊடகங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு மாகாணத்தை போன்று கிழக்கு மாகாணமும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டது.

இந்திய நிதியுதவியுடன் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படும் என்று வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 6 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஆளும் தரப்பினர் புகழ்வதும், எதிர்தரப்பினர் அதற்கு எதிர்மறையான கருத்துக்களை குறிப்பிடுவதையும் அவதானிக்கமுடிகிறது.

75 ஆண்டுகால சாபத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என்ற பல வாக்குறுதிகளை குறிப்பிட்டு 159 ஆசனங்களுடன் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது.

நாட்டு மக்கள் இன,மத பேத வேறுபாடின்றி அரசாங்கத்தை தெரிவு செய்துள்ளார்கள்.

ஆகவே மக்களின் அபிலாசைகளையும், எதிர்பார்ப்பையும் நிறைவேற்ற வேண்டிய தார்மீக பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.

கடந்த அரசாங்கத்தை போன்று பேசிக் கொண்டும், செயற்பட்டுக் கொண்டும் அரசாங்கம் இருக்க கூடாது என்பது மக்களின் நிலைப்பாடாகும்.

கிடைக்கப்பெற்ற மக்களாணையை அரசாங்கம் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மக்கள் கருதுகிறார்கள்.

வரவு செலவுத் திட்டத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளுக்கு அதிக மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

விவசாயம் இந்த நாட்டின் பிரதான துறையாகும். விவசாயிகள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆகவே இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம்.

முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தை நிர்மாணிப்பதற்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளதை வரவேற்கிறேன்.

இது நீண்டகால கோரிக்கையின் வெற்றியாகும்.

மன்னார்- புத்தளம் பாதை முக்கியமானது. இந்த பாதையை புனரமைத்தால் வடக்கு- தெற்கு இணைப்புக்கு வசதியானதாக அமையும்.

சிலாவத்துறை பகுதியில் கலாச்சார மண்டபத்தை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்து 20 சதவீதமளவில் பணிகளை நிறைவு செய்தோம்.

கடந்த 4 ஆண்டுகாலமாக இந்த நிர்மாணிப்பு இழுபறிநிலையில் உள்ளது. இதனையும் கருத்திற் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தளம், மன்னார், கல்முனை பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் அஸ்ரப் வைத்தியசாலைக்கு தேவையான மனித மற்றும் பௌதீக வளங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

யுத்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்த பெரும்பாலானவர்கள் இன்றும் தனியார் காணிகளில் தற்காலிக குடியிறுப்புக்களை அமைத்து வாழ்கிறார்கள்.

இவர்களின் அடிப்படை தேவை விருத்திக்காக கடந்த காலங்களில் 8 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது.

பல்வேறு காரணிகளால் இந்த நிதி மீளப்பெறப்பட்டது. ஆகவே இந்த நிதியை அந்த மக்களின் அபிவிருத்திக்காக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்படவில்லை என்ற நிலைப்பாட்டை ஊடகங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு மாகாணத்தை போன்று கிழக்கு மாகாணமும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டது.

இந்திய நிதியுதவியுடன் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படும் என்று வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

வீடியோ

Related posts

அதிகரிக்கப்படும் அதிபர்களுக்கான கொடுப்பனவு!

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்து

புர்கா மற்றும் நிகாப் இற்கு அமைச்சரவை தடை