அரசியல்உள்நாடு

மத்திய வங்கியின் 2024 வருடாந்த பொருளாதார மீளாய்வு அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிப்பு

அண்மைக் காலத்தில் நாட்டின் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு இலங்கையின் பொருளாதார மீட்சியில் நிலையான முன்னேற்றத்தை எடுத்துக்காட்டும் இலங்கை மத்திய வங்கியின் பிரதான வெளியீடான வருடாந்த பொருளாதார மீளாய்வு அறிக்கை 2024 (AER 2024) ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சர் அநுர குமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பி.நந்தலால் வீரசிங்க இன்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியிடம் அறிக்கையை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

பேரண்டப் பொருளாதார மேம்பாடுகள், நிதி கட்டமைப்பு ரீதியான நிபந்தனைகள், மத்திய வங்கி கொள்கை மீளாய்வு மற்றும் பேரண்டப் பொருளாதாரக் தொலைநோக்கு ஆகிய முக்கிய நான்கு அத்தியாயங்களை 2024 வருடாந்த பொருளாதார மீளாய்வு அறிக்கை கொண்டுள்ளது .

இந்த மீளாய்வின்படி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு 2024 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க மீட்சிக்கான அறிகுறிகளைக் காட்டியுள்ள இலங்கைப் பொருளாதாரம், சவால்களுக்கு மத்தியிலும், கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள ஏனைய பல நாடுகளை விட வேகமாக மீட்சிக்கான பாதையில் பிரவேசித்துள்ளது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய சாதகமான குறிகாட்டிகளில் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துதல், வாங்கும் சக்தியை ஓரளவு அல்லது முழுமையாக மீட்டெடுத்தல் மற்றும் நிச்சயமற்ற தன்மையைக் குறைத்தல் ஆகியவை அடங்கும்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, திறைசேரியின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன, மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கே.எம்.ஏ.என். தவுலகல, உதவி ஆளுநர் கலாநிதி சீ.அமரசேகர, பொருளாதார ஆராய்ச்சி பணிப்பாளர் கலாநிதி எஸ். ஜெகஜீவன் மற்றும் மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி தொடர்பான மேலதிகப் பணிப்பாளர்களான கலாநிதி எல்.ஆர்.சி. பத்பேரிய மற்றும் கலாநிதி வீ.டீ. விக்ரமாரச்சி ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

“தீபாவளிக்கு தீர்வு” ரணிலை விமர்சிக்கும் சம்பந்தன்

கொரோனா வைரஸ் – 1701 பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில்

ரயில் கட்டணமும் அதிகரிக்கிறது