அரசியல்உள்நாடு

மக்களை ஏமாற்றியது போதும், தேர்தல் வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுங்கள் – சஜித்

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர், வாக்குறுதியளிக்கப்பட்ட சலுகைகளை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் எதிர்பார்த்தனர். ஆனால் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

மின் கட்டணத்தை 66% குறைப்போம் என்றனர். பொருட்களின் விலைகளை குறைப்போம் என்றனர். கடவுச்சீட்டு வரிசைக்கான தீர்வுகளை தருவதாக சொன்னார்கள். இதுவரை நடக்கவில்லை. மக்களை ஏமாற்றியுள்ளனர் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜனாதிபதி கூறியது போல் மின் கட்டணத்தை 66% குறைத்து, பொருட்களின் விலையை குறைத்து, வரியை முடியுமானால் குறைக்குமாறு நான் அவருக்கு சவால் விடுகின்றேன். மக்களை ஏமாற்றும் அரசாங்கமாக இந்த அரசாங்கம் நடந்து கொள்ளக் கூடாது என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மத்திய கொழும்பில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்து உரையாற்றும் போதே தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அழுத்தங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் பெரும்பான்மையான மக்களுக்கு தருவதாக கூறிய சலுகைகளை இன்னமும் வழங்கவில்லை.

இவற்றை செய்வதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை தேவையில்லை. இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாத காரணத்தினால் அரசாங்கம் திணறி வருகிறது. மறுபுறம் மக்கள் அழுத்தங்களை சந்தித்து வருகின்றனர் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தேர்தல் மேடையில் கூறப்பட்ட வரி குறைப்பு எதுவும் நடந்தபாடில்லை. இந்த வரிகளை குறைக்க சர்வதேச நாணய நிதியம் இணங்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்வு கூட பிற்போடப்பட்டுள்ளது என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் தாளங்களுக்கு ஆடமாட்டேன் என்று சொன்னவர்கள், இன்று சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கு ஆடும் பொம்மையாக மாறியிருக்கிறார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, வரிச் சுமையுடன் கூடிய பொருட்களின் விலைகளையும் மின்சாரக் கட்டணங்களையும் குறைக்கும்.

தாம் புதிய சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை எட்டுவோம். எனவே இந்த வாயாடிகளுக்கு ஏமாற வேண்டாம் என சஜித் பிரேமதாச இங்கு மேலும்
தெரிவித்தார்.

Related posts

மின்சார சபையின் நிலக்கரி கையிருப்பு ஜூன் மாதம் வரையே

மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ்; 186 ஆக உயர்வு

பால்மா விலை திருத்தம் தொடர்பான யோசனை இன்று