அரசியல்உள்நாடு

மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக அடக்குமுறைகளைப் பிரயோகிக்க வர வேண்டாம் – சஜித் பிரேமதாச

மக்கள் விடுதலை முன்னனியின் திசைகாட்டி தரப்பினர் மேடைக்கு மேடை மக்களுக்கு சொன்னதை செய்ய முடியாமல், நாட்டை திறம்பட ஆள முடியாமல் நாட்டையே செய்வதறியா நிலைக்கு தள்ளிவருகின்றனர்.

அரசாங்கமானது மக்களைப் பலப்படுத்தி, அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும்.

ஆனால் இந்த அரசாங்கம் நுகர்வோருக்கு மலிவு விலையில் அரிசி மற்றும் தேங்காய் போன்றவற்றையேனும் வழங்க முடியாத நிலையை எட்டியுள்ளது. நாட்டில் உப்புக்கு கூட தட்டுப்பாடு நிலவுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கமொன்றானது எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை நன்கு புரிந்து கொண்டு திட்டமிட்டு செயற்பட வேண்டும். ஆனால் அவ்வாறான போக்கு இந்த அரசாங்கத்திடம் இல்லை.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் ஒருபுறமிருக்க இன்று அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குக் கூட தட்டுப்பாடு நிலவுகின்றன.

மக்களால் அமைதியான முறையில் போராட்டம் நடத்தக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் குண்டர்கள் அதனை அடக்கும் நிலைக்கு நாடு வீழ்ந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை பிரதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் இரத்தினபுரி, ரக்வான ஐக்கிய மக்கள் சக்தி செயற்பாட்டு அலுவலகத்தை இன்று (03) திறந்து வைத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரச நிர்வாகத்தில் வீழ்ச்சி.

தற்போது, ​​சிவப்பு லேபிள்கள் கொண்ட அத்தியவசியமாக பரிசோதனை செய்ய வேண்டும் என குறிக்கப்பட்ட கொள்கலன்கள் பரிசோதனையின்றி வெளியிடப்படுகின்றன.

அரச நிர்வாகம் வீழ்ச்சி கண்டுள்ளன. கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் மூலம் ஆளுந்தரப்பினர் தோற்கடிக்கப்பட்டு வருவதில் இருந்து இது தெளிவாகிறது.

இதன் காரணமாக, இவர்கள் வேட்புமனுக்களை சமர்ப்பிக்காது கூட்டுறவுச் சங்க தேர்தல்களில் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றனர்.

யக்கல கம்புருபிட்டிய பிரதேசத்திலும் இவ்வாறானதொரு சம்பவமே இடம்பெற்றுள்ளது. ஆளுந்தரப்பினர் கருத்துச் சுதந்திரத்தையும், மக்களின் ஜனநாயக உரிமையையும் கூட நசுக்குகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கம் அச்சத்தில்.

தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆதரவு இருந்தால், கூட்டுறவுச் சங்க தேர்தல்களுக்கு பயப்பட வேண்டாம்.

தமது அணி தோற்பதால் அச்சமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு ஜனநாயக ரீதியான தேர்தல்களை தடுத்து வருகின்றனர். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கும் இவர்கள் அழுத்தம் பிரயோகிப்பார்கள் போல் தெரிகிறது.

இவர்கள் ஜனநாயகம் தொடர்பில் பெரிதாக பேசினாலும், அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள வாக்களிக்கும் உரிமைக்குக் கூட பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஜனநாயக உரிமைகளுக்கு களங்கம் ஏற்படுத்த இடமளிக்க மாட்டோம்.

ஜனநாயகத்தை அழிக்கும் எந்த ஒரு வேலைத்திட்டத்துக்கும் இடமளிக்க மாட்டோம். ஜனநாயக உரிமைகளுக்கு களங்கம் ஏற்படுத்த இடமளிக்க மாட்டோம். மக்கள் கருத்துக்கு இடைஞலும் அழுத்தமும் பிரயோகிக்க வேண்டாம்.

வசனங்களை அங்கும் இங்குமாக புரட்டிப் பேசி அதிகாரத்தை பெற்றுக் கொண்டவர்களால் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாது போயுள்ளன. அச்சுறுத்தல் அச்சமூட்டல் போன்ற விடயங்களை கையாள வேண்டாம். இது அவமானகரமான செயல்.

ஜனநாயக உரிமைகளை அபகரிக்கும் இந்த அரசாங்கத்திற்கு எதிராக ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை நடத்தி, மக்களின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் நாம் செயற்படுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமருக்கு அமோக வரவேற்பு

பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் எவருக்கும் கருத்து தெரிவிக்க முடியாது – பதில் பொலிஸ் மா அதிபர்

பேருந்து கட்டணம் 25% இனால் அதிகரிப்பு