சூடான செய்திகள் 1

போதைப்பொருள் ஒழிப்பில் வெற்றிகரமான பெறுபேறுகள் கிடைத்துள்ளது

(UTVNEWS | COLOMBO) – கடந்த சில வருடங்களில் போதைப்பொருள் ஒழிப்பில் பல வெற்றிகரமான பெறுபேறுகள் நாட்டுக்கு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தலின் காரணமாக நாட்டுக்கு ஏற்படும் பாரிய அழிவை தவிர்ப்பதற்காக தனது அரசியல் வாழ்க்கையில் தொடர்ச்சியாக தலைமைத்துவத்தை வழங்கியதுடன், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக மரண தண்டனையை வழங்குவதற்கும் ஜனாதிபதி என்ற வகையில் தான் கைச்சாத்திட்டபோதும் அரசியல் பேதங்களின்றி பொறுப்புப்கூற வேண்டியவர்கள் அதற்கெதிராக செயற்பட்ட காரணத்தினால் அந்த செயற்திட்டத்தை வெற்றிபெறச் செய்ய முடியவில்லை என்றும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

என்றாலும் தனது அர்ப்பணிப்பின் பெறுபேறாக கடந்த சில வருடங்களாக போதைப்பொருள் ஒழிப்பில் வெற்றிகரமான பல பெறுபேறுகள் நாட்டுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதுடன், யார் எதைக் கூறினாலும் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற துன்பியல் சம்பவமும் நாட்டுக்கான அந்த நிகழ்ச்சித்திட்டத்தை சீர்குழைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சி என்றே தான் நம்புவதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று (04) முற்பகல் கொழும்பு நாலந்தா கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

பிரித்தானிய மகா ராணியினால் வழங்கப்படும் கௌரவ விருதான நைட் விருதை பெற்றுள்ள நாலந்தா கல்லூரியின் பழைய மாணவரும் இலங்கை சென் ஜோன் அமைப்பினதும் போதைப்பொருள் ஒழிப்பு அரச சார்பற்ற நிறுவனத்தினதும் தலைவரான வைத்தியர் சரத் சமரகே அவர்களை பாராட்டும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாட்டின் வைத்திய துறைக்காக முக்கிய பங்களிப்பை மேற்கொண்டுள்ள சரத் சமரகே, போதைப்பொருளுக்கெதிராக இலங்கை அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒற்றிணைந்த சம்மேளனத்தின் தலைவராகவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்து வருகின்றார்.

வெள்ளவாய, பாதுக்க வைத்தியசாலைகளில் மக்கள் மனம்வென்ற வைத்தியரான அவர், களுத்துறை தேசிய சுகாதார நிறுவனத்தின் சுகாதார முகாமைத்துவ கற்கைப் பிரிவின் துறைத் தலைவராக செயற்பட்டு 1983 – 1993 வரையான 10 வருடக் காலப் பகுதியில் வைத்தியர்கள், தாதிகள் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பலரை நாட்டுக்கு வழங்குவதற்கு அர்ப்பணிப்பை செய்துள்ளார். 2007 – 2010ஆம் ஆண்டு வரை சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகமாகவும் செயற்பட்ட அவர், ஓய்வுபெற்றதும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஆசிய வைத்தியர்கள் சங்கத்தின் இலங்கைக் கிளையின் தலைவராகவும், உலக மருத்துவ நிர்வாகிகள் சம்மேளனத்தின் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அவர், நாட்டுக்காகவும் வைத்திய துறைக்காகவும் சர்வதேச ரீதியாக பாரிய பணிகளை மேற்கொண்டுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் தமது துறைகளில் சிறந்து விளங்குவோரை தெரிவு செய்து நைட் பதக்கங்கள் பிரித்தானிய மகா ராணியினால் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வருடம் உலகில் உள்ள 20 பேருக்கு அப்பதக்கங்கள் வழங்கப்பட்டன. இம்முறை நைட் பதக்கம் வென்ற ஒரேயொரு ஆசிய நாட்டவராக வைத்தியர் சரத் சமரகே விளங்குகிறார். மேலும் அவர் 2019 செப்டெம்பர் 19ஆம் திகதி இலண்டன் நகரில் சென் ஜோன் தேவாலயத்தினாலும் கௌரவிக்கப்பட்டார்.

வைத்தியர் சரத் சமரகே நாட்டுக்கு செய்த சேவையை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், இலங்கை மக்களின் சார்பாக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

சங்கைக்குரிய குப்பியாவத்த போதானந்த நாயக்க தேரர், பாராளுமன்ற உறுப்பினர்களான திலங்க சுமதிபால, சந்திம வீரக்கொடி, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் ஆகியோர் உள்ளிட்ட நாலந்தாவின் பழைய மாணவர்களும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹூல்டன் உள்ளிட்ட அதிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related posts

கல்கிஸ்ஸையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி

இந்த ஆண்டின் முதல் காலாண்டு இறுதிக்குள் மக்களின் வாழ்க்கைச் சுமை 75% குறையும் – அமைச்சர் நளின் பெர்னாண்டோ..!

ரயில்வே ஊழியர்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பில்