சூடான செய்திகள் 1

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் அதிகார சபை

(UTV|COLOMBO) போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பது தொடர்பிலான இடைக்கால கட்டுப்பாட்டு சபை ஒன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

போதைப் பொருளுக்கு எதிரான சட்ட திட்டங்கள் மற்றும் சுற்றிவளைப்புகளின் ஊடாக முன்னெடுத்துச் செல்லப்படும் போதைப்பொருள் தடுப்பு வேலைத் திட்டங்களுடன், போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான முறையான வேலைத்திட்டம் ஒன்றின் அவசியத்தை உணர்ந்த ஜனாதிபதி, போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான அதிகார சபையை நிறுவுவதற்கான ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

அந்த அதிகார சபையை சட்ட ரீதியாக ஸ்தாபிக்கும் வரை காலந்தாழ்த்தாமல் எதிர்பார்த்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்த இடைக்கால கட்டுப்பாட்டு சபையை அமைப்பதற்கு நேற்று (20) ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டார்.

சங்கைக்குரிய குப்பியாவத்தே போதானந்த தேரர், ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சிறிசேன ஹேரத், போதைப்பொருள் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் வைத்தியர் சமந்த கிதலவஆரச்சி, விசேட மனோ வைத்திய நிபுணர் ஜயமால் டி சில்வா, விசேட மனோ வைத்திய நிபுணர் தனுஜ மகேஸ், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ரமணி பெரேரா, முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் காமினி ஜயசிங்க, முன்னாள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் சாந்தி நாவுக்கரசன் ஆகியோர் இந்த குழுவில் அங்கத்துவம் வகிக்கின்றனர்.

நேற்று நண்பகல் இக்குழுவினரை சந்தித்த ஜனாதிபதி, ஒழுங்கான கட்டமைப்பின் ஊடாக இந்த சபையின் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதன் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தினார்.

புதிய தொழிநுட்பமும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வு அளிப்பதற்கு உலகின் முன்னேற்றமடைந்த நாடுகளில் பின்பற்றும் முறைகளை கற்றறிந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதன் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்திய ஜனாதிபதி, வட மாகாணத்தை மையமாக கொண்டு அதன் முன்னோடிச் செயற்திட்டங்களை முன்னெடுப்பதன் சாத்தியங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

இந்த அதிகார சபையினூடாக எதிர்காலத்தில் ஜனாதிபதி செயலகம், சுகாதார அமைச்சு, கல்வியமைச்சு மற்றும் பொலிஸார் ஆகிய நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

குழுவின் கட்டமைப்பு தொடர்பிலான பரிந்துரைகளை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் அதிகார சபை துரிதமாக ஸ்தாபிக்கப்படவுள்ளதுடன், இலங்கையில் இவ் அதிகார சபையை நிறுவும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலங்களில் போதைப் பொருளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமுல்படுத்தவுள்ளதாகவும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பது தொடர்பாகவும் கூடிய கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

(ஜனாதிபதி ஊடக பிரிவு)

 

 

 

 

Related posts

பாடசாலைகளை ஒருவாரம் தாமதித்து ஆரம்பிக்குமாறு கோரிக்கை

டொரிங்டன் பிரதேசத்தில் பாரிய வாகன நெரிசல்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனு மீதான விசாரணை இன்றும்…