சூடான செய்திகள் 1

பேசும் மொழியினை அடிப்படையாகக்கொண்டு மக்கள் வேறுபடக் கூடாது…

(UTV|COLOMBO) பேசும் மொழியினை அடிப்படையாகக்கொண்டு நாட்டு மக்கள் பிளவுபட்டிருப்பதற்கு கட்சி பேதமின்றி அனைத்து அரசியல்வாதிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்று (07) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிங்களத்திற்கு மொழி பெயர்க்கப்பட்ட புனித அல்குர்ஆன் நூலை வெளியிடுவதற்காக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இஸ்லாத்தின் வரலாறு தொடர்பில் புரிந்துகொள்வதற்கும் முஸ்லிம் மக்களின் கலாசாரம் மற்றும் மத பின்புலம் தொடர்பில் ஏனைய மதத்தினரும் புரிந்துகொள்ளக்கூடியவாறு மொழிபெயர்ப்புக்கு அப்பாற்பட்டு சரளமான சிங்கள மொழியில் அல்குர்ஆனை மொழிபெயர்த்திருப்பது சிறப்பம்சமாகும்.

இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துக்களை பெற்றுக்கொண்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, மொழியினால் நாட்டு மக்கள் பிளவுபட்டிருப்பது நாட்டின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கு தடையாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அனைத்து இன, மத பிரிவினர்களிடையே ஏற்படுத்திக்கொள்ளும் புரிந்துணர்வு மற்றும் பரஸ்பர நம்பிக்கையின் ஊடாக மக்கள் பிளவுபடுவதை தடுக்க முடியும் என்று தெரிவித்த ஜனாதிபதி, புனித அல்குர்ஆனை சிங்கள மொழியில் மொழிபெயர்த்தமை நாட்டின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கு பாரிய பங்களிப்பினை ஆற்றும் என்றும் தெரிவித்தார். மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, மொழியை அடிப்படையாக்கொண்டு பாடசாலைகளை வகைப்படுத்தும் நடவடிக்கைகளும் நிறைவுசெய்ய வேண்டியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, தனது எண்ணக்கருவிற்கமைய பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட மும்மொழி தேசிய பாடசாலை வேலைத்திட்டம் இலங்கையின் ஏனைய மாகாணங்களிலும் அமுல்படுத்துவது அவசியமாகும் என்றும் தெரிவித்தார்.

சிங்களத்திற்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட புனித அல்குர்ஆனின் முதலாவது பிரதியினை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்செய்க் றிஸ்வி முப்தி ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார்.இஸ்லாமிய மத தலைவர்களும் முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் செயலாளர் எம்.எம்.ஏ.முபாறக் உள்ளிட்ட உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடக  பிரிவு)

 

 

 

 

Related posts

மதுபானத்தின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு

கொவிட் 19 மத்திய நிலையமாக தேர்தல்கள் ஆணைக்குழு

மூன்று தினங்களுக்கு அரச விசேட விடுமுறை