சவூதி அரேபிய அரசாங்கத்தினால் புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக இலவசமாக வழங்கப்படுகின்ற Free Moment Pass என்று அழைக்கப்படுகின்ற பேசா விசாக்களை வழங்குமாறு கோரி ஆளும் கட்சியின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் பிரயோகிப்பதாக தெரிய வருகின்றது.
இந்த வருடம் 35 பேசா விசாக்களே இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் 20 பேசா விசாக்களை தங்களுக்கு வழங்குமாறு ஆளும் கட்சியிலுள்ள எட்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரச ஹஜ் குழுவிற்கு தொடர்ச்சியாக அழுத்தம் வழங்கி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த விசாக்களை பங்கீடு செய்வது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்க முடியாத நிலைக்கு அரச ஹஜ் குழு தள்ளப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
கடந்த காலங்களில் இலங்கைக்கு 100க்கு அதிகமான பேசா விசாக்கள் கிடைக்கப் பெற்றன.
இந்த பேசா விசாக்கள் அரசியல்வாதிகளுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட விடயம் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக ஏற்கனவே வெளிக்கொணரப்பட்டது.
இதனையடுத்து, இலங்கைக்கு வழங்கப்படுகின்ற பேசா விசாக்களின் எண்ணிக்கையினை 35ஆக சவூதி அரசாங்கம் குறைத்தது.
இவ்வாறான நிலையில் சவூதி அரேபியாவிற்கு கடந்த ஜனவரியில் விஜயம் செய்த சமய விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி இந்த எண்ணிக்கையினை அதிகரிக்குமாறு சவூதி ஹஜ் அமைச்சரிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதேவேளை, இந்த வருடத்திற்கான 3,500 ஹஜ் கோட்டாக்கள் 92 ஹஜ் முகவர் நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
இந்த 92 முகவர் நிறுவனங்களும் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி 500 பேரைக் கொண்ட ஐந்து குழுக்களுக்கு தலா இரண்டு என்ற அடிப்படையிலும் 800 பேரைக் கொண்ட குழுவுக்கு மூன்று என்ற அடிப்படையிலும் 13 பேசா விசாக்களை வழங்க அரச ஹஜ் குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹஜ் முகவர் நிறுவனத்தின் உரிமையாளரொருவர் தெரிவித்தார்.
இந்த பங்கீடு ஹஜ் முகவர் நிறுவனங்களுக்கு ஒருபோதும் போதாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
-றிப்தி அலி