உள்நாடு

புதிய சுகாதார ஊழியர்களுக்கு விசேட பயிற்சி – சுகாதார சேவைகள் பணிமனை.

(UTV | கொழும்பு) –

அண்மையில் கிழக்கு மாகாண சபையினால் பல்நோக்கு அபிவிருத்தி செயலணி ஊழியர்கள் 886 பேருக்கு வழங்கப்பட்ட நிரந்தர நியமனத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அலுவலகங்களுக்கு நியமிக்கப்பட்ட சுகாதார ஊழியர்கள் 160 பேருக்கான வரவேற்பும், பயிற்சியின் தொடக்கமும் இன்று காலை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள், சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே. முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு புதிதாக நியமனம் பெற்ற சுகாதார ஊழியர்கள் மத்தியில் உரையாற்றினார். தனது உரையில் இலங்கையிலையே முன்மாதிரியான பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையாக கல்முனை எப்போதும் திகழ்கிறது. இந்த விடயத்திலும் புதிய ஆடை, பயிற்சி நூல்கள், இனிப்பு, உணவு போன்றன வழங்கி அவர்கள் தமது முன்மாதிரியை வெளிக்காட்டியுள்ளார்கள். வேலைப்பழு காரணமாக இந்த நிகழ்வில் கலந்துகொள்வதில் முழு விருப்பம் எனக்கு ஆரம்பத்தில் இருக்கவில்லை. என்றாலும் சீருடையுடன் 160 புதிய சுகாதார ஊழியர்களை இங்கு கண்டது எனக்கு புத்துணர்ச்சி தருகிறது. சுகாதார சேவை தொழிலல்ல. அது விலைமதிப்பற்ற உன்னத சேவை என்றார்.

இன்று ஆரம்பித்துள்ள இந்த பயிற்சியானது வைத்தியசாலைகள், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள், சுகாதார பணிமனை, ஆரம்ப சுகாதார நிலையம், மருந்தகம், களஞ்சியம் போன்ற பல்வேறு இடங்களில் களப் பயிற்சியாகவும் நடைபெறவுள்ளது. முதல் நாள் பயிற்சியை சம்மாந்துறை வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஆசாத் எம். ஹனீபா, அக்கரைப்பற்று வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ரீ.எஸ். ஆர்.ரீ. ஆர்.ரஜாப் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.பி.எம். வாஜித் உட்பட பிரிவுத்தலைவர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மஹிந்த – பசில் ஆகியோருக்கான வெளிநாட்டுப் பயணத் தடை நீடிப்பு

சிலிண்டரின் மற்றைய தேசியப் பட்டியலுக்கு கஞ்சனவை தெரிவு செய்ய யோசனை

editor

MV-Xpress pearl கப்பலை அகற்றும் பணிகள் நவம்பரில்