சூடான செய்திகள் 1

பிலிப்பைன்ஸில் வாழும் இலங்கையர்களின் நலன்பேணலுக்கு மேலும் நடவடிக்கைகள் – ஜனாதிபதி

(UTV|COLOMBO)-பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தனது பயணத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய இலங்கை – பிலிப்பைன்ஸ் நட்புறவின் மூலம் பிலிப்பைன்ஸில் வாழும் இலங்கையர்களின் பிரச்சினைகளை தீர்த்து அவர்களின் நலன்பேணல்களுக்குத் தேவையான மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட் (Rodrigo Duterte) அவர்களின் விசேட அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு அரசமுறை பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் பிலிப்பைன்ஸில் வாழும் இலங்கையர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று 17.01.2019 பிற்பகல் மனிலா நகரில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உயர் கல்விபெறும் மாணவர்கள், தொழில்வல்லுனர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதுடன், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதி அவர்களிடம் எடுத்துக் கூறினர்.

உயர் கல்விபெறும் மாணவர்களின் பிரச்சினைகள், விசா பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் போன்ற விடயங்கள் இதன்போது முன்வைக்கப்பட்டன. இந்த அனைத்து பிரச்சினைகளையும் பிலிப்பைன்ஸுக்கான இலங்கை தூதுவரிடம் முன்வைக்குமாறு குறிப்பிட்ட ஜனாதிபதி , பிலிப்பைன்ஸ் அரசாங்கத்துடன் கலந்துரையாடி இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மேற்கொள்ள முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி மற்றும் பௌதீக வள அபிவிருத்தியின் மூலம் பிலிப்பைன்ஸ் அடைந்துள்ள முன்னேற்றங்களை பாராட்டிய ஜனாதிபதி , போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அவர்களினதும் அரசாங்கத்தினதும் அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.

இன்று இலங்கைக்கு முக்கிய சவாலாக உள்ள போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதற்கு தனது வழிகாட்டலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் விரிவான நிகழ்ச்சித் திட்டங்கள் பற்றியும் ஜனாதிபதி அவர்கள் பிலிப்பைன்ஸில் உள்ள இலங்கையர்களுக்கு விளக்கிக் கூறினார்.

இந்த நிகழ்ச்சித் திட்டங்களை பலப்படுத்துவதற்கு இவ்வருடம் ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்திலிருந்து மற்றுமொரு முக்கிய நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி  மேலும் தெரிவித்தார்.

தனது பிலிப்பைன்ஸ் விஜயத்தில் இரண்டு நாடுகளுக்கிடையிலும் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள இருதரப்பு உடன்பாடு பற்றியும் இலங்கையர்களுக்கு விளக்கிய ஜனாதிபதி , இந்த இணக்கப்பாட்டினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

 

 

 

Related posts

ஸ்ரீ. பொ.முன்னணி – இ. தொ.காங்கிரஸ் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டக்கல்வி – அமைச்சரவை அனுமதி

இன்று முதல் முகக்கவசம் அணிதல் கட்டாயம்