அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தல் – 196 ஆசனங்களுக்கு 8388 வேட்பாளர்கள் போட்டி

பாராளுமன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 690 வேட்புமனுக்களின் கீழ் 8388 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

பாராளுமன்றத்துக்கு தெரிவாகும் 225 உறுப்பினர்களில் மக்களின் வாக்குகளால் தெரிவாகவுள்ள 196 பிரதிநிதிகளுக்காகவே இவ்வாறு 8000க்கும் மேற்பட்டோர் போட்டியிடவுள்ளனர்.

இவர்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 18 ஆசனங்களுக்காக 966 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

பாராளுமன்றத்தில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 196 பேர் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படுவர். ஏனைய 29 பேர் தேசிய பட்டியலுக்கூடாக தெரிவு செய்யப்படுவர்.

இம்முறை பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (11) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.

அதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களிடமிருந்து 764 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. எனினும், அவற்றில் 74 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

பாராளுமன்றத்தில் கம்பஹா மாவட்டத்துக்கே அதிக ஆசனங்கள் ஒதுக்கப்படும். அவற்றின் எண்ணிக்கை 19 ஆகும். இந்த 19 ஆசனங்களுக்காக இம்முறை தேர்தலில் 24 அரசியல் கட்சிகள் மற்றும் 17 சுயாதீன குழுக்கள் ஊடாக 902 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

அதேவேளை பாராளுமன்றத்தில் கொழும்பு மாவட்டத்துக்கே இரண்டாவது அதிக ஆசனங்கள் ஒதுக்கப்படும். அவற்றின் எண்ணிக்கை 18 ஆகும்.

இந்த 18 ஆசனங்களுக்காக 27 அரசியல் கட்சிகள் சார்பாகவும், 19 சுயாதீன குழுக்கள் ஊடாகவும் 966 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதற்கமைய இம்முறை கொழும்பு மாவட்டத்திலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

குருணாகல் மாவட்டத்துக்கு 15 ஆசனங்கள் ஒதுக்கப்படும். அதற்காக 18 அரசியல் கட்சிகள், 9 சுயாதீன குழுக்கள் ஊடாக 486 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கண்டி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 12 ஆசனங்களுக்காக 22 அரசியல் கட்சிகள் மற்றும் 12 சுயாதீன குழுக்கள் ஊடாக 510 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

களுத்துறை மாவட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள 11 ஆசனங்களுக்காக 15 அரசியல் கட்சிகள் மற்றும் 13 சுயாதீன குழுக்களிலிருந்து 392 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இரத்தினபுரி மாவட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள 11 ஆசனங்களுக்காக 18 அரசியல் கட்சிகள் மற்றும் 7 சுயாதீன குழுக்கள் ஊடாக 350 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

காலி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் சார்பிலும், 5 சுயாதீன குழுக்கள் ஊடாகவும் 264 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.

அநுராதபுரம் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் மற்றும் 9 சுயாதீன குழுக்களிலிருந்து 312 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

பதுளை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 ஆசனங்களுக்காக 15 அரசியல் கட்சிகள் மற்றும் 5 சுயாதீன குழுக்களிலிருந்து 240 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கேகாலை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 ஆசனங்களுக்காக 14 அரசியல் கட்சிகள் மற்றும் 4 சுயாதீன குழுக்களிலிருந்து 216 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

நுவரெலியா மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 8 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் மற்றும் 11 சுயாதீன குழுக்களிலிருந்து 308 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

புத்தளம் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 8 ஆசனங்களுக்காக 24 அரசியல் கட்சிகள் மற்றும் 15 சுயாதீன குழுக்களிலிருந்து 429 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மாத்தறை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 ஆசனங்களுக்காக 15 அரசியல் கட்சிகள் மற்றும் 7 சுயாதீன குழுக்களிலிருந்து 220 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 ஆசனங்களுக்கு 16 அரசியல் கட்சிகள் மற்றும் 9 சுயாதீன குழுக்களிலிருந்து 250 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

திகாமடுல்லைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 ஆசனங்களுக்காக 22 அரசியல் கட்சிகள் மற்றும் 42 சுயாதீன குழுக்களிலிருந்து 640 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இம்முறை பொதுத் தேர்தலில் அதிக கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் இந்த மாவட்டத்திலேயே களமிறங்க முன்வந்துள்ளன. யாழ்ப்பாணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 ஆசனங்களுக்காக 23 அரசியல் கட்சிகள் மற்றும் 21 சுயாதீன குழுக்களிலிருந்து 396 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.

வன்னி தேர்தல் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 ஆசனங்களுக்கு 24 அரசியல் கட்சிகள் மற்றும் 27 சுயாதீன குழுக்களிலிருந்து 459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாத்தளை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 ஆசனங்களுக்காக 16 அரசியல் கட்சிகள்மற்றும் 7 சுயாதீன குழுக்களிலிருந்து 184 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மட்டக்களப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 ஆசனங்களுக்காக 27 அரசியல் கட்சிகள் மற்றும் 22 சுயாதீன குழுக்களிலிருந்து 392 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் மற்றும் 14 சுயாதீன குழுக்களிலிருந்து 217 வேட்பாளர்கள் களமிங்குகின்றனர்.

மொனராகலை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 ஆசனங்களுக்காக 12 அரசியல் கட்சிகள் மற்றும் 3 சுயாதீன குழுக்களிலிருந்து 135 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.

பொலன்னறுவை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 ஆசனங்களுக்காக 13 அரசியல் கட்சிகள் மற்றும் 2 சுயாதீன குழுக்களிலிருந்து 120 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அதற்கமைய மொனராகலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலேயே குறைந்தளவான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

-எம்.மனோசித்ரா

Related posts

பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணிநீக்கம்

மண்ணுக்காக போராடும் நாம் நீருக்காக போராடும் நிலை உருவாகும்

ஹீனடியன மஹேஷின்’ பிரதான உதவியாளர் கைது!