அரசியல்உள்நாடு

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு – பிரதமர் ஹரிணி

தற்போதைய அரசாங்கத்திடம் திருட்டுக்கள் எதுவும் இல்லாத காரணத்தால் கல்வித் தகைமைகளை தேடும் குறுகிய அரசியல் இலக்கில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் கொள்வனவுக்கான கொடுப்பனவு வழங்குவதற்கான குறைநிரப்பு மதிப்பீட்டின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, பொருளாதார நெருக்கடி காரணமாக, 55% பாடாசாலை மாணவர்களின் கல்வியில் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. இது கிராமப்புற மற்றும் பெருந்தோட்டக் பிள்ளைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பிள்ளைகளில், 53.2% பாடசாலை உபகரணங்களை வாங்குவதை முற்றிலும் நிறுத்தியுள்ளனர். 62.1% பிள்ளைகள் முன்பு பயன்படுத்திய பாடசாலை உபகரணங்களையே மீண்டும் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு இடர் நிலைக்கு உள்ளாகியிருக்கும் பாடசாலை மாணவர்களின் கல்வியில் ஏற்படும் எதிர்மறையான தாக்கத்தை குறைக்கும் வகையில், 2025 ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளை தொடங்குவதற்கு பாடசாலை பிள்ளைகளுக்கு கொடுப்பனவு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, அஸ்வெசும உரித்துடைய குடும்பங்களின் ஐந்து வயது முதல் பதினாறு வயது வரையிலான பிள்ளைகளுக்கு ஒரு பிள்ளைக்கு ஆறாயிரம் (6000) ரூபாய் கொடுப்பனவை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்வெசும நிவாரணம் கிடைக்காத நிதி நெருக்கடியில் உள்ள குடும்பங்களின் பிள்ளைகளுக்கும் இந்த கொடுப்பனவை வழங்க எதிர்பார்த்துள்ளோம்.

மேலும், பிள்ளைகளை குறிப்பாக பாடசாலை கல்வியில் ஈடுபாடுடையவர்களாக வைத்திருக்க அரசு செயற்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் மதிய உணவு வழங்குவதில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. அதற்காகப் பணம் ஒதுக்கப்பட்டாலும், இந்த உணவு எல்லா பிள்ளைகளுக்கும் உரியமுறையில் கிடைத்ததா என்பது கேள்விக்குறியதாகும்.

2025 ஆம் ஆண்டிற்கு அனைத்து பிள்ளைகளுக்கும் பாடசாலை சீருடைகளை வழங்க நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதற்காக சீன அரசாங்கம் எங்களுக்கு முழுமையாக சீருடைகளை வழங்கியுள்ளது. இதற்காக சீன அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

நாட்டின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு காண முற்படும் வேளையில் எதிர்கட்சியின் சில குழுக்கள் தங்களுடன் தொடர்புடைய ஊடகங்களைப் பயன்படுத்தி அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை சீர்குலைக்க முயற்சிப்பது குறித்து நான் கவலையடைகிறேன்.

சீன அரசாங்கம் பாடசாலை சீருடை வழங்கும் போது நடந்த சம்பவத்தில் என்னையும் இணைத்து சீன அரசிற்கு கூட இல்லாத பிரச்சினையை எழுப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னணியில் உள்ள அரசியல் உள் நோக்கத்தை சீன தூதரும் சீன அரசும் புரிந்து கொண்டனர்.

எமது அரசாங்கத்தால் சர்வதேச உறவுகளை முறையாக பேண முடியாது என்ற கருத்தை சமூகமயப்படுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டாலும் அந்த அனைத்து முயற்சிகளும் தோற்கடிக்கப்பட்டுள்ளன.

தற்போது எமது அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் கல்வித் தகைமையில் எதிர்க்கட்சிகளுக்கு அதிக அக்கறை ஏற்பட்டுள்ளது. முன்னர், எதிர்க்கட்சிகள் அரசின் கல்வித் தகைமைகள் குறித்தல்லாது, திருட்டைப் பற்றியே பேசின. இப்போது எங்கள் திருட்டுகளை கண்டு பிடிக்க முடியாததால் கல்வித் தகைமைகளைத் தேடுகின்றனர்.

மக்களுக்காக நேர்மையாக ஒரு பொய்யை அம்பலப்படுத்த வேண்டும் என்று விரும்பினால், இந்த விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைக்கிறோம். ஆனால் இங்கு மிகக் குறுகிய அரசியல் நோக்கமே உள்ளது.

இந்த அரசாங்கம் நியமிக்கப்பட்டது முதல், எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை குறைத்து மதிப்பிட முயன்றன. எங்களைப் பற்றிய தவறான பிம்பத்தை மக்கள் மயப்படுத்த முயற்சித்தார்கள்.

இந்த பாராளுமன்றத்தை மக்கள் எந்த நோக்கத்திற்காக தெரிவுசெய்தார்கள் என்பதை எதிர்க்கட்சி இன்னும் புரிந்து கொள்ளவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

-பிரதமர் ஊடகப் பிரிவு

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,989 ஆக பதிவு

இலங்கையின் கடன் தரப்படுத்தலில் சாதகமான போக்கு

editor

“IMF பணம் கிடைக்கும் திகதியில் இன்னும் நிச்சயமில்லை”