உலகம்

பலஸ்தீனர்களை வெளியேற்றி காசாவை அமெரிக்கா கைப்பற்றும்

போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் உள்ள பலஸ்தீனர்களை வேறு இடத்திற்கு இடம்பெயரச் செய்து அந்தப் பகுதியை அமெரிக்கா கைப்பற்றி பொருளாதார ரீதியில் அபிவிருத்தி செய்யும் அதிர்ச்சியூட்டும் திட்டம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இவ்வாறான திட்டத்தை ஏற்கனவே ‘இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை’ என்று பரவலாக விமர்சனம் எழுந்த நிலையில், இஸ்ரேல்–பலஸ்தீன மோதல் தொடர்பில் அமெரிக்காவின் பல தசாப்த கால கொள்கைக்கு எதிரானதாகவே ட்ரம்ப் அறிவித்திருக்கும் இந்தத் திட்டம் உள்ளது.

அமெரிக்கா சென்றிருக்கும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் பேசும்போதே, எந்த குறிப்பிட்ட விளக்கமும் அளிக்காது அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டார்.

‘காசாவை அமெரிக்கா கைப்பற்றி அங்கு பணிகளை செய்வோம்’ என்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ‘நாம் அதனை சொந்தமாக்கி அனைத்து அபாயகரமான குண்டுகள் மற்றும் ஏனைய ஆயுதத் தளங்களை செயலிழக்கச் செய்வோம்.

அந்தப் பகுதியை அபிவிருத்தி செய்து ஆயிரக்கணக்காக வேலை வாய்ப்புகளை உருவாக்கி, ஒட்டுமொத்த மத்திய கிழக்கும் பெருமைப்படக் கூடியதாக மாற்றுவோம்.

நீண்ட கால உரிமையை வைத்திருப்பதன் மூலம் மத்திய கிழக்கு பகுதியில் ஸ்திரத்தன்மையை கொண்டுவருவோம்’ என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அங்கே யார் வாழ்வார்கள் என்று கேட்டபோது, ‘உலக மக்களின்’ இல்லம் ஒன்றாக அது மாறும் என்று ட்ரம்ப் பதிலளித்தார்.

எனினும் 25 மைல்கள் நீளமும், 6 மைல்கள் அகலமும் கொண்ட காசா கடலோரப் பகுதியை எவ்வாறு கைப்பற்றுவது மற்றும் எந்த நிர்வாகத்தின் கீழ் செயற்படுத்துவது போன்ற கேள்விகளுக்கு பதிலளிப்பதை ட்ரம்ப் தவிர்த்துக்கொண்டார்.

இது அவதானத்தை செலுத்தக் கூடிய ஒரு திட்டமாக உள்ளது என்று குறிப்பிட்டிருக்கும் நெதன்யாகு, காசாவின் மாற்றத்திற்கான எதிர்காலமாக இருக்கும் என்றும் வரலாற்றை மாற்றக் கூடியதாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

எனினும் ட்ரம்ப் இதற்கு முன்னரும் காசாவை சுத்தம் செய்வதற்கு பலஸ்தீனர்களை ஏற்கும்படி எகிப்து மற்றும் ஜோர்தானுக்கு அழைப்பு விடுத்திருந்தார். எனினும் இந்தத் திட்டத்தை அந்த இரு நாடுகளும் கடுமையாக நிராகரித்தன.

‘அபத்தமானது’
இந்நிலையில் ட்ரம்பின் புதிய திட்டத்திற்கு அமெரிக்காவுக்குள்ளும் மத்திய கிழக்கு உட்பட உலக நாடுகளில் இருந்தும் கண்டனங்கள் வெளியாகி வருகின்றன.

ட்ரம்பின் இந்தத் திட்டம் கேலிக்குரியது மற்றும் அபத்தமானது என்று காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் அமைப்பின் அதிகாரியான சமி அபூ சுஹ்ரி தெரிவித்துள்ளார்.

‘இவ்வாறான யோசனையால் பிராந்தியத்தில் தீ மூட்டவே முடியும். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற காசாவில் உள்ள எமது மக்கள் விடமாட்டார்கள்.

எமது மக்கள் மீதான ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதல்களையே முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமே ஒழிய அவர்களை தமது நிலத்தில் இருந்து வெளியேற்றுவதாக இருக்கக் கூடாது’ என்று அவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்தத் திட்டத்திற்கு உடனடியாக கண்டனத்தை வெளியிட்டிருந்தனர்.

‘காசா மீதான அமெரிக்காவின் படையெடுப்பு ஆயிரக்கணக்கான அமெரிக்க துருப்புகளை படுகொலை செய்வதாக அமையும் என்பதோடு மத்திய கிழக்கில் பல தசாப்த கால போருக்கே வழி வகுக்கும்’ என்று அமெரிக்க செனட்டர் கிறிஸ் மோர்பி, எக்ஸ் சமூக வலைத்தளத்தில் சாடியுள்ளார்.

‘ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை முழுமையாக கைப்பற்றுவது மற்றும் காசா பகுதியில் இருந்து பலஸ்தீனர்களை வெளியேற்றுவது இஸ்ரேலின் திட்டமாகும்’ என்று குறிப்பிட்ட ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோவ், ‘கூட்டுத் தண்டனை கொள்கையை செயற்படுத்துவதை ரஷ்யா நிராகரிக்கிறது’ என்றார்.

தமது சொந்த நிலத்தில் இருந்து பலஸ்தீனர்களை வெளியேற்றும் எந்த திட்டத்தையும் நிராகரிப்பதாக சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டதோடு, தமது நிலைப்பாடு தெளிவானது மற்றும் வெளிப்படையானது என்றும் அது தொடர்பில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றும் தெரிவித்தது.

சர்வதேச மன்னிப்புச் சபை பணிப்பாளர் நாயகம் போல் ஓபிரைன் கூறும்போது, காசாவில் இருந்து அனைத்து பலஸ்தீனர்களையும் வெளியேற்றுவது, ஒரு சமூகமாக அவர்களை அழிப்பதற்கு சமமானதாகும் என்றார்.

‘காசா அவர்களின் தாயகம். பெரும்பாலும் அமெரிக்க குண்டுகளை பயன்படுத்தி, இஸ்ரேல் அரசாங்கம் ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்றதன் விளைவாகவே காசாவின் இறப்புகளும் அழிவுகளும் ஏற்பட்டன’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

2ஆம் கட்ட பேச்சு
காசாவில் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி அமுலுக்கு வந்த போர் நிறுத்தத்தின் இரண்டாம் கட்டத்திற்கான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் வகையிலேயே நெதன்யாகு அமெரிக்கா பயணமானார்.

இது தொடர்பில் அவர் டிரம்பின் மத்திய கிழக்குக்கான தூதுவர் ஸ்டீவ் விட்கொப் உடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

‘தற்போது நாம் 2ஆம் கட்டத்தில் இருக்கிறோம்’ என்று விட்கொப் முன்னதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைக்கான கொள்கை அளவுகோல்கள் பற்றி நெதன்யாகுவுடன் கலந்துரையாடியதாகவும் மத்தியஸ்தம் வகிக்கும் நாடுகளில் ஒன்றான கட்டார் பிரதமரை சந்திக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதுத குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளது.

காசாவில் 15 மாதங்களுக்கு மேல் நீடித்த இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் 61,700க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அங்குள்ள இடிபாடுகள் தொடர்பில் ஐ.நா. கடந்த ஜனவரியில் மதிப்பீடு ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில் காசாவில் இஸ்ரேலின் குண்டுவீச்சுகளால் 50 மில்லியன் தொன் இடிபாடுகள் இருப்பதாகவும் அதனை அகற்றுவதற்கு 1.2 பில்லியன் டொலர் வரை செலவு ஏற்படும் என்றும் 21 ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்ளும் என்று குறிப்பிட்டிருந்தது.

அதேபோன்று காசாவை மீளக் கட்டியெழுப்புவதற்கு 50 தொடக்கம் 80 பில்லியன் டொலர் வரை செலவாகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

காசாவில் போர் நிறுத்ததிற்கு மத்தியிலும் இஸ்ரேலியப் படை அடிக்கடி அங்கு தாக்குதல்களை நடத்தி வருவதோடு கான் யூனிஸ் நகரில் நேற்று பலஸ்தீன் சிறுவன் ஒருவனை இஸ்ரேலிய படை சுட்டுக் கொன்றதாக பலஸ்தீன உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான வபா தெரிவித்தது.

மறுபுறம் காசாவில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததை அடுத்து இஸ்ரேலியப் படை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் படை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.

குறிப்பாக ஜெனின் நகரில் இஸ்ரேலின் படை நடவடிக்கை பதினாறாவது நாளாக நேற்றும் நீடித்ததோடு இதுவரை 25 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரு இஸ்ரேலிய படையினர் சுட்டுக்கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று கூறியது.

துபாஸ் நகரின் வடக்காக 2 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் டயாசிர் கிராமத்தில் உள்ள சோதனைச்சாவடி ஒன்றின் மீது பலஸ்தீன ஆயுததாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் எட்டு படையினர் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் இராணுவம் கூறியது.

இதன்போது தாக்குதல்தாரி சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.

Related posts

இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு பஹ்ரைன் தடை

பாகிஸ்தான் பாடசாலையில் குண்டு வெடிப்பு – சிறுவர்கள் உட்பட 7 பேர் பலி

‘Purple Heart’ : வாராற்றுப் பதிவு