சூடான செய்திகள் 1

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டுள்ள இளைஞர்களை விடுதலை செய்யுமாறு அமைச்சர் ரிஷாட் வலியுறுத்து!

(UTV|COLOMBO)-சிறிய சிறிய குற்றங்களுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். “சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து தருவோம் என்ற சமூக ஒப்பந்தத்துடன் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதியும் பிரதமரும் இந்த விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டுமெனவும் இருவரும் மனம் விட்டு கலந்து பேசி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தார்மீக கடமையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சிறுபான்மை மக்களின் புரையோடிப்போன பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் அக்கறையுடன் செயற்பட்டு, அரசுக்கு பல அழுத்தங்களை தொடர்ந்தும் வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வவுனியா நகரில் அவருக்கு அளிக்கப்பட வரவேற்பு விழாவின் போது உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது. நான் மீள் குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சராக இருந்த போது 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறைப்பிடிக்கப்பட்ட 12 ஆயிரம் இளைஞர்களை அரசு விடுவிக்க நடவடிக்கை எடுத்தேன். இவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு குடும்பத்துடன் மீண்டும் இணைந்து வாழ வழிவகை செய்தோம்.தற்போது சிற் சில குற்றங்களுக்காக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சிறைகளில் வாடுகின்றனர். அவர்களின் குடும்பங்கள் நிர்க்கதியாகியும் உள்ளன. சிலரின் மனைவிமார் இறந்துவிட்டதனால் பிள்ளைகள் அனாதையாகி விட்டனர் . இந்த நிலையில் மனிதாபிமான அடிப்படையில் இவ்விளைஞர்களை விடுதலை செய்யுமாறு வேண்டுகின்றேன். போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களும் களத்தில் நின்று வழிகாட்டியவர்களும் தற்போது ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர்.அதே போன்று இவர்களும் சமுதாயத்தில் சுதந்திரமாக வாழ நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். வடக்கு கிழக்கில் பொதுமக்களின் பாவனைக்குரிய பல்லாயிரக்கணக்கான காணிகள் இராணுவத்தினர்களாலும் வன பரிபாலன மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினாலும் கையகப்படுத்தப்பட்டுள்ளன .இவற்றையும் அரசு விடுவித்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

 

-ஊடகப்பிரிவு

 

 

 

 

Related posts

சிம்பாவே முன்னாள் ஜனாதிபதி ராபர்ட் முகாபே உலகினை விட்டும் பிரிந்தார்

விசேட மேல் நீதிமன்றத்தின் முதலாவது வழக்கு நாளை…

புலமைப்பரிசில் பரீட்சைக்கான மீள் திருத்த பெருபேறுகள் இன்று(17) வெளியிடப்படவுள்ளது