அரசியல்உள்நாடு

அரசாங்கம் நெல்லுக்கு அதிகூடிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன் எம்.பி

அரசாங்கம் வடக்கு கிழக்கில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு இது வரை உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை என்றும், பல்வேறு பாதிப்புகளுக்கு மத்தியில் விவசாய செய்கை யை முன்னெடுத்துள்ள விவசாயிகளின் நெல்லுக்கு உரிய நிர்ணய விலையை தீர்மானிக்க அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (03) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

அரசாங்கம் தொடர்ந்தும் விவசாயிகள் மீது கருணை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.விவசாயிகள் தொடர்ச்சியாக ஏற்படுகின்ற இயற்கை அனர்த்தத்தினால் பாரிய அழிவுகளை சந்திக்கின்றனர்.

எனினும் தமது பாதிப்பிற்கு நியாயமான தீர்வை தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் அதே நேரம் அரசாங்கம் விவசாயிகளின் நெல்லின் விலையை நிர்ணயம் செய்யும் நிலையில் அவரது சிந்தனை இருக்கவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

பொறுப்பான அமைச்சர் நெல்லின் நிர்ணய விலையை அறிவிப்பதாக கூறுகின்ற அதே நேரம் அனுராதபுரம் மற்றும் ஏனைய பகுதிகளில் நெல் அறுவடை முடிந்த பின்னரே நெல்லுக்கு நிர்ணய விலையை தாம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

அனுராதபுரத்தில் உள்ள விவசாயிகள் மாத்திரமே விவசாயிகள் என்றும் வடக்கு கிழக்கில் உள்ள விவசாயிகளை விவசாயிகள் போல் தெரியவில்லை யா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

நெல்லுக்கான நிர்ணய விலையை அரசாங்கம் குறைவாக நிர்ணயிக்க உள்ளதாக அறிகிறோம்.இதனால் விவசாயிகள் விவசாயத்திற்காக செலவு செய்த முதலீடுகளை மீள பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

எனவே அரசாங்கம் விவசாயிகள் நஷ்டத்தை எதிர் நோக்காத வகையில் கூடிய விலை நிர்ணயத்தை தீர்மானிக்க வேண்டும்.

அவ்வாறு செய்யவில்லை என்றால் ஏனைய தனியார் நெல் கொள்வனவு செய்கின்றவர்கள் அரசாங்கத்தை விட மிகவும் குறைவாகவே நெல்லை பெற்றுக்கொள்ள விலையை அவர்கள் தீர்மானிப்பார்கள்.

எனவே கூடிய அளவிலான விலையை நெல்லுக்கு அரசாங்கம் தீர்மானிக்கின்ற போது தனியார் நெல் கொள்வனவு செய்கிறவர்களும் கூடுதலான விலைக்கு நெல்லை கொள்வனவு செய்வார்கள்.

விவசாயத்திற்காக விவசாயிகள் வங்கிகளில் கடனை பெற்றும் நகைகளை வங்கியில் அடமானம் வைத்தும் பணத்தை பெற்று விவசாயத்தை முன்னெடுத்துள்ளனர்.

வறுமைக்கோட்டின் கீழ் உள்ள விவசாயிகளை நாங்கள் தூக்கி விடுவதாக இருந்தால் அவர்களின் நெல்லுக்கான உரிய விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்.

எனவே புதிய அரசாங்கம் சாட்டுப்போக்கு கூறாமல் நெல்லின் விலையை நிர்ணயம் செய்து அழிவில் இருந்து கொண்டுள்ள விவசாயிகளை தூக்கி விட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது என தெரிவித்தார்.

இதே வேளை மூன்று கட்சிகளின் ஒற்றுமையான செயல்பாடு,தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு,இந்திய மீனவர்களால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் அவர் மேலும் கருத்துக்களை தெரிவித்தார்.

-மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்

Related posts

சீனி நிறுவனங்கள் தொடர்பில் வௌியான முக்கிய தகவல்!

அரசினை பொறுப்பேற்க SJB தயார் – ஹர்ஷ

ரிஷாதின் மனைவி மற்றும் மாமனாருக்கு பிணை