உள்நாடு

நாட்டின் சகல பிரஜைகளும் சுதந்திர புருஷராக மதிக்கப்பட வேண்டும்

(UTV | கொழும்பு) – நாட்டின் சுதந்திரத்தை சகலரும் அனுபவிக்குமளவில், புதிய அரசியலமைப்பும் ஆட்சியும் இருக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

“இலங்கைக்கு கிடைத்த சுதந்திரம் சகல பிரஜைகளுக்கும் உரித்தான உரிமை. பெரும்பான்மை சமூகத்தவர் மாத்திரம் இதன் பலன்களை அனுபவிப்பது பாரபட்சமாகவே அமையும். சகல சமூகங்களையும் கௌரவிக்கும் வகையில்தான் இந்தச் சுதந்திரம் வழங்கப்பட்டது.

நமது நாட்டின் சுதந்திரத்தை பெறுவதற்காக நாட்டிலே உள்ள பௌத்த, இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய தலைமைகள், ஒரு குடும்பமாக நின்று போராடி பெற்றதுதான் நமது சுதந்திரம். ஆனால், சுதந்திரத்தின் பிறகு ஒரு சில பேரினவாத சக்திகள் அதை மறந்து செயல்படுவதை வேதனையோடு இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.

அதேபோன்று, சுதந்திரத்துக்கு முன்பிலிருந்தே நமது நாட்டிலே இருக்கக் கூடிய, எல்லா மதத்தவர்களையும் மதிக்கக்கூடிய வகையிலான தனியார் சட்டங்களைக் கூட இன்று இல்லாமலாக்க வேண்டுமென்று குரல் கொடுக்கின்ற இனவாதிகளையும் நாங்கள் பார்க்கிறோம். அவ்வாறான இனவாதிகளுக்கு தலைமைத்துவத்தை வழங்கி, அண்மைக்காலமாக இந்த நாட்டின் நிம்மதியை, சகோதரத்துவத்தை, சமத்துவத்தை இல்லாமலாக்க சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறானவர்களுக்கு நாட்டின் சட்டங்களை இயற்றுகின்ற அளவுக்கு பொறுப்புக்களை இந்த அரசு கொடுத்திருப்பது எமக்கு வேதனை தருகின்றது.

இன, மத மற்றும் கலாச்சாரங்களின் பன்முகத்தன்மையை பாதுகாப்பதுதான் உண்மையான சுதந்திரம். ஆட்சியிலுள்ளோர் இதை உணர்வது அவசியம்.

இத்தினம் குறித்த நம்பிக்கைகள் மீண்டும் ஏற்பட வேண்டும் என்பதுவே எமது சமூகங்களின் பிரார்த்தனை. சிறுபான்மையினர் என்பதற்காக அவர்களை ‘நாட்டின் விசுவாசிகளில்லை’ எனக்காட்ட முயலும் சக்திகள், நமது தாய் நாட்டின் கௌரவத்தையே சிதைக்க முனைகின்றன.

அத்துடன், பயங்கரவாத தடுப்புச் சட்டம் என்ற மோசமான ஒரு சட்டத்தின் மூலம், சிறையிலே வாடுகின்ற பல நூற்றுக்கணக்கான அப்பாவி இளைஞர், யுவதிகளுக்கு நீதி கிடைப்பதற்கும், அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கும் எம்மாலான பங்களிப்புக்களை செய்ய இத்தினத்தில் உறுதிபூணுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

Related posts

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை கண்காணிக்க இராணுவத்தினர்

ஒட்சிசனுடன் மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்தது

தம்மிக பெரேராவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு