சூடான செய்திகள் 1

தோட்டத் தொழிளார்களை தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவேன் – சஜித்

(UTV|COLOMBO) – கடந்த 150 வருடங்களுக்கு மேலாக அடிமை யுகத்தில் வாழ்ந்த இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாகவே வாக்குரிமையை பெற்றுக் கொடுக்க முடிந்தது. எனினும் அவர்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப் படவில்லை. மிகக் குறைந்த மாதாந்த சம்பளத்திற்கே அவர்கள் தொழில் செய்து வருகின்றனர். எனது ஆட்சிக் காலத்தில் இந்த மோசமான நிலைமைகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டு தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும். அவர்கள் தோட்டத் தொழிலாளர்களாக இல்லாமல் தோட்ட உரிமையாளர்களாக மாற்றப்படுவார்கள் என ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நேற்று மாலை(14) இரத்தினபுரியில் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்குடன் இரத்தினபுரி மாநகர சபை கேட்போர் கூடத்தில் இரத்தினபுரி மாவட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி ஒழுங்கு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கனேசன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கூட்டத்தில் ஆயிரக்கணக்கான இரத்தினபுரி மாவட்ட ஆதரவாளர்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றுகையில், தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதன் ஊடாக அவர்களையும் கௌரவமான பிரஜைகளாக மாற்றியமைப்பேன். நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு மிகப்பெரிய பங்காளர்களாக இருந்து வரும் தோட்டத் தொழிலாளர்களின் நலன்களை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் தேசிய வேலைத் திட்டமொன்றை நான் அறிமுகப்படுத்த இருக்கின்றேன். இதன் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் கல்வி சுகாதார மற்றும் அனைத்து சமூகப் பிரச்சினைகளையும் தீர்க்க முயற்சிப்பேன்.

அதேபோன்று இரத்தினபுரி மாவட்ட தமிழ் மொழி மூல மாணவ சமூகத்தின் கல்வி உயர்வுக்காக சகல வசதிகளையும் உள்ளடக்கிய ஒர் உயர்தர பாடசாலை யொன்றையும் விரைவாக உருவாக்கித் தருவேன் எனவும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேற்படி கூட்டத்தில் நீதி அமைச்சர் தலதா அத்துகொரள, இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.ஏ.விஜேதுங்க, ஹேஷா விதாரண, கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்,பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் உட்பட தமிழ் முற்போக்கு முன்னணியின் முக்கிய பிரமுகர் பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவர் கைது

சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத்திட்டம் – ஜனாதிபதி தலைமையில் நாளை

பாராளுமன்ற உறுப்பினர்கள் மோதல்-காவற்துறை உயரதிகாரி பாரளுமன்றிற்கு அழைப்பு