பணியில் இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இலங்கையை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் விமான நிலையம் உட்பட அனைத்துத் தரப்பினரும் இதற்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, கடல் வழியாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கான சாத்தியக்கூறுகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
பொலிஸ் துறையின் உயர் பதவியை வகிக்கும் இந்த சக்திவாய்ந்த நபர், மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் சரணடைவது அல்லது நாட்டை விட்டு வெளியேறுவது ஆகிய இரண்டு வழிகளில் ஒன்றை அவர் பரிசீலித்து வருவதாக சந்தேகம் இருப்பதாகக் கூறினார்.
ஊடகங்களும் அனைத்து குடிமக்களும், அதிகாரிகளும் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், நீதியைப் பெறுவதில் அரசாங்கத் தலைவர்களும் மக்களும் ஒரே பக்கம் இருப்பதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
இதேவேளை, தேசபந்து தென்னகோனை கைது செய்ய அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அதிகபட்ச படையை நிறுத்தியுள்ளதாகவும், புலனாய்வு சேவைகளைப் பயன்படுத்தி டிரான் அலஸின் வீட்டுக்கு வருபவர்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் எங்களுடன் ஓர் அமைச்சரவை அமைச்சர் கூறினார்.