கொழும்பு – 07 இலுள்ள தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு வக்பு சபையினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நிர்வாகத்தினை இரத்துச் செய்யுமாறு வக்பு நியாய சபை கடந்த மார்ச் 1ஆம் திகதி உத்தரவிட்டுள்ளது.
இப்பள்ளிவாசலுக்கு வக்பு சபையினால் கடந்த நவம்பர் 8ஆம் திகதி ஆறு விசேட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
ஏற்கனவே இப்பள்ளிவாசலுக்காக வக்பு சபையினால் நியமிக்கப்பட்ட எட்டு நிர்வாகிகள் செயற்படுகின்ற நிலையிலேயே விசேட நிர்வாகிகள் நியமனம் மேற்கொள்ளப்பட்டது.
டாக்டர் அஹமட் ரிஷி, எம்.எஸ்.எம். நபீஸ், எம்.என்.எம். றிஸ்வான், ஜே.ஏ. சலாம், முஹைனுதீன் அஹமத் மற்றும் இம்திகாப் சுபர் ஆகியோரே புதிய நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர்.
இதற்கு எதிராக இப்பள்ளிவாசலின் தலைவரான றியாஸ் சாலி வக்பு நியாய சபையில் மேன் முறையீடொன்றினை கடந்த டிசம்பர் 15ஆம் திகதி சட்டத்தரணி சஹ்மி பரீதின் ஊடாக மேற்கொண்டார்.
இதன் விசாரணை கடந்த மார்ச் 1ஆம் திகதி வக்பு நியாய சபையில் இடம்பெற்றது. இதன்போது மனுதாரர் சார்பில் சட்டத்தரணி நஷீபா புஹாரியின் அறிவுறுத்தலில் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம்.சஹீட் மற்றும் சட்டத்தரணி செய்ட் அலி ஆகியோர் ஆஜராகி விசேட நிர்வாகிகள் நியமனத்தினை இரத்துச் செய்யுமாறு வாதாடினர்.
இப்பள்ளிவாசலுக்கான விசேட நிர்வாகிககள் நியமனம் தொடர்பில் வக்பு நியாய சபையினால் 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் இதன்போது சட்டத்தரணிகளினால் சமர்ப்பணம் செய்யப்பட்டன.
இதற்கு மேலதிகமாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் விசேட நிர்வாகிகள் நியமனம் தொடர்பில் 2005 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் வழங்கப்பட்ட தீர்ப்புக்களும் வக்பு நியாய சபையில் முன்வைக்கப்பட்டது.
இந்த தீர்ப்புக்களின் ஊடாக பள்ளிவாசல் நிர்வாகிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னரே விசேட நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட முடியும். எனினும், இப்பள்ளிவாசலுக்கான விசேட நிர்வாகிகள் நியமனத்தில் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என சிரேஷ்ட சட்டத்தரணி சஹீட் வாதாடினார்.
மேற்படி சமர்ப்பணங்களை அவதானித்த பின்னர், தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு வக்பு சபையினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நிர்வாகத்தினை இரத்துச் செய்யுமாறு வக்பு நியாய சபை உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.