தேசபந்து தென்னகோனின் நியமனம் எனது அழுத்தம் காரணமாக காலம் தாழ்த்தப்படுவதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கூறப்பட்டது.
ஆனால் நான் அவரை மறைத்து வைத்திருப்பதாகக் கூறுகின்றனர்.
இவை அனைத்தும் கற்பனை கதைகளாகுமென முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
கொழும்பு பிளவர் வீதியில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் பங்கேற்கச் சென்ற போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வேட்புமனு தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை. எனினும் கொழும்பு மாநகரசபையில் பொது வேட்பாளரொருவரை களமிறக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.
ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றங்களையும் அடிப்படையாகக் கொண்டே எவ்வாறு தேர்தலில் போட்டியிடுவது என்பது குறித்து தீர்மானிக்கப்படும்.
அதற்கமைய கொழும்பு மாநகரசபை தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
பொது சின்னமொன்றில் சகல எதிர்க்கட்சிகளும் இணைந்து ஒரு வேட்பாளரை முன்னிலைப்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகின்றோம்.
அந்த சின்னம் யானையா அல்லது வேறு ஏதேனுமா என்பது எதிர்வரும் சில தினங்களுக்குள் தீர்மானிக்கப்படும். அரசியலில் மிகவும் தீர்க்கமாக சிந்தித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
இதற்கு முன்னரும் பி.பி.ஜயசுதந்தர மற்றும் காமினி செனவிரத்ன போன்றோர் மறைந்திருப்பதாகக் கூறப்பட்டது. தற்போது தேசபந்து தென்னகோன் மறைந்திருப்பதாகக் கூறுகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எனது அழுத்தம் காரணமாகவே தேசபந்து தென்னகோனின் நியமனம் காலம் தாழ்த்தப்படுவதாகக் கூறினர்.
ஆனால் தற்போது நான் அவரை மறைத்து வைத்திருப்பதாகக் கூறுகின்றனர். இவை அனைத்தும் கற்பனைகளால் கூறப்படும் கதைகளாகும்.
நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபரை கண்டு பிடிக்க முடியாத நிலைமை காணப்படுகின்றதென்றால் இதுவே இன்றைய நிலைவரமாகும் என்றார்.
-எம்.மனோசித்ரா