உள்நாடு

துமிந்த சில்வா குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது – சுமந்திரன் எம்.பி

(UTV | கொழும்பு) –

மரணதண்டனைக் குற்றவாளியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு செல்லுபடியற்றதென, உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத் தக்கதென தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கை சரித்திரத்தில் முதல் தடவையாக, ஜனாதிபதியொருவரால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு செல்லுபடியற்றதென, உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாக சுட்டிக்காட்டிய சுமந்திரன், யாழ் மிருசுவில் படுகொலையாளி சுனில் ரத்நாயக்கவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பையும் தாம் சவாலுக்குட்படுத்தியிருப்பதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பொதுமக்களின் காணி விடயம் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றிற்காக ஜனவரி (17)இன்று, முல்லைத்தீவு – மாங்குளம் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, துமிந்த சில்வாவிற்கு கொடுத்த பொதுமன்னிப்பை புறந்தள்ளி அது தவறாக சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட மன்னிப்பு எனவும், அது செல்லுபடியற்றதெனவும் தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது. பாரதலக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலை தொடர்பில், மரதண்டனைக்கு உட்படுத்தப்பட்ட துமிந்த சில்வாவிற்கே இந்த தீர்ப்பு கொடுக்கப்பட்டது. ஹிருணிகா பிரேமசந்திர சார்பில், நான் ஆஜராகி இந்த வழக்கை வாதாடியிருக்கின்றேன் .

இலங்கை சரித்திரத்தில் முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது. இது வரவேற்க வேண்டிய ஒரு விடயம் இப்படியான வேறு சில வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன.  விஷேடமாக மிருசுவில் படுகொலையாளி சுனில் ரத்நாயக்கவிற்கு கொடுத்த மன்னிப்பையும் நாங்கள் சவாலுக்கு உட்படுத்தி இருக்கின்றோம். அந்த தீர்ப்பு இன்னும் வெளிவரவில்லை – என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

  பத்து மாதங்களில் இரண்டரை லட்சம் பேர் வெளிநாடு சென்றுள்ளனர்

மொட்டுக்கட்சி ரணிலுக்கே ஆதரவு – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம!

உடனடியாக போரை நிறுத்தி அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும் – பொப் பிரான்சிஸ்