முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் 2023 ஆம் ஆண்டு அரசாங்க நிதியை செலவழித்து லண்டனுக்கு சுற்றுலா சென்றதாக வெளியிடப்பட்ட கூற்று முற்றிலும் பொய்யானது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, ரணில் விக்ரமசிங்க 2023 ஆம் ஆண்டு மூன்று முறை லண்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, முதலாவது சுற்றுப்பயணம் – 2023 மே 09 ஆம் திகதி, மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக.
இரண்டாவது சுற்றுப்பயணம் – பாரிஸ் மாநாட்டில் பங்கேற்கும் போது சர்வதேச ஜனநாயகவாதிகளின் சங்கத்தின் (IDU) 40 ஆவது ஆண்டு அமர்வுக்காக.
மூன்றாவது சுற்றுப்பயணம் – ஹவானாவில் நடைபெற்ற G77 மாநாட்டில் பங்கேற்ற பின்னர், நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்று, அதன்பின் லண்டனுக்கு சென்றது.
மூன்றாவது முறையாக லண்டனுக்கு சென்றது, பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவுக்கு பிரித்தானியாவின் வுல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பட்டம் வழங்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காகவாகும்.
ரணில் விக்ரமசிங்க நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற அதே நாட்களில் வுல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் அந்த நிகழ்வு நடைபெற்றதால், அழைப்பின் பேரில் முன்னாள் ஜனாதிபதியும் அந்த நிகழ்வில் பங்கேற்க லண்டனுக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப்பயணங்களின் போது ரணில் விக்ரமசிங்க பல அரச தலைவர்களை சந்தித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஜனாதிபதியின் மனைவியாக பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க அந்த காலகட்டத்தில் சர்வதேச அளவில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்கள், பயிலரங்குகள் போன்றவற்றிலும் பங்கேற்றுள்ளார்.
நியூயோர்க்கிலிருந்து வந்து பகல் நேரத்திற்கு பின்னர் லண்டனை விட்டு வெளியேற திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அன்று பிற்பகலில் சில சந்திப்புகள் நடைபெற்றதால், ரணில் விக்ரமசிங்க இலங்கைக்கு திரும்புவது அடுத்த நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அதிகாரிகளின் லண்டன் சுற்றுப்பயணத்திற்கு அதிக அளவு பணம் செலவிடப்பட்டதாக கூறப்படுவது மிகவும் சிக்கலானது என்றும், இராஜதந்திர ரீதியாக மேற்கொள்ளப்படும் சுற்றுப்பயணங்கள் குறித்து தற்போதைய அரசாங்கத்திற்கு புரிதல் இல்லை என்பது இந்த விடயத்தில் தெளிவாகிறது என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க 2023 ஆம் ஆண்டு அரசாங்க செலவில் லண்டனுக்கு எந்தவொரு தனிப்பட்ட சுற்றுப்பயணத்திலும் ஈடுபடவில்லை எனவும், அதுதொடர்பாக வெளியிடப்படும் அனைத்து கூற்றுகளும் தவறானவை எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.