உள்நாடு

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சை தொடர்பில் வந்த புதிய தகவல்

கடும் மழை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள உயர் தரப் பரீட்சையை மீள நடத்துவது குறித்து எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா தெரிவித்தார்.

நிலவும் வானிலை தொடர்பில் அறிவுறுத்துவதற்காக இன்று (27) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளர்,

தற்போதைய வானிலை காரணமாக உயர்தரப் பரீட்சை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 29ஆம் திகதிக்கு பின்னர் வானிலை நிலைமைகளை மீளாய்வு செய்து தேவையான பொருத்தமான நிலைமைகளை அமைத்துக் கொண்டு உயர்தரப் பரீட்சையை மீண்டும் ஆரம்பிப்போம் என நம்புகின்றோம்.

அது குறித்த தகவல்கள் பரீட்சை திணைக்களத்தால் உரிய நேரத்தில் வழங்கப்படும்”. என்றார்.

கடும் மழை காரணமாக க.பொ.த உயர்தரப் பரீட்சையை 3 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நேற்று (26) தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, இன்று, நாளை மற்றும் 29ஆம் திகதி ஆகிய மூன்று நாட்கள் உயர்தரப் பரீட்சை நடைபெறாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

திட்டமிட்டபடி 30ம் திகதி உரிய கால அட்டவணைக்கு அமைய பாரீட்சைகள் நடத்தப்படும் என்றும், இடைநிறுத்தப்பட்ட மூன்று நாட்கள் தொடர்பான பாடங்கள் டிசம்பர் 21, 22, 23 ஆகிய திகதிகளில் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

Related posts

கருணாவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு

இன்றும் மழை

நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் ஷெஹான் சேமசிங்க அதிரடி அறிவிப்பு!