வகைப்படுத்தப்படாத

தமிழர்கள் கேட்கும்: காணி- பொலிஸ் அதிகாரங்களை தரமுடியாது நாமல் ராஜபக்‌ஷ அதிரடி (VIDEO)

தேர்தல் காலத்தில் வடக்கில் உள்ளவர்களை ஏமாற்ற வேண்டிய தேவை கிடையாது. முடிந்ததை முடியும் என்பேன், முடியாததை முடியாது என்பேன். தமிழர்களின் கலாச்சாரத்தை பாதுகாப்பேன். மொழி உரிமையும் வழங்குவேன். ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை ஒன்றிணைத்து காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை ஒருபோதும் வழங்கமாட்டேன் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது கன்னி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் புதன்கிழமை (21) அநுராதபுரம் நகரில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இந்த நாட்டின் அரசியல் வரைபடத்தை மாற்றியமைத்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேசிய உற்பத்திகளை முன்னிலைப்படுத்திய பொருளாதார திட்டங்களை முன்னெடுத்து குறுகிய காலத்தில் நாட்டை பல்வேறு துறைகளில் முன்னேற்றினார்.

2015 ஆம் ஆண்டு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்த நாட்டை கையளித்தோம். 2019 ஆம் ஆண்டு பொருளாதார மட்டத்தில் பாதிக்கப்பட்டிருந்த நாட்டையே கோட்டபய ராஜபக்ஷ அரசாங்கத்தை பொறுப்பேற்றார். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் கொவிட் பெருந்தொற்றுத் தாக்கத்துக்கும் முகங்கொடுக்க நேரிட்டது. பொருளாதாரமா அல்லது மக்களின் உயிரா என்ற தீர்மானமிக்க கேள்வி எழுந்த போது மக்களின் உயிரையே பாதுகாத்தோம்.

பொருளாதார பாதிப்பினை முன்னிலைப்படுத்தி ஒரு தரப்பினர் எமது அரசாங்கத்தை வீழ்த்தினார்கள். அரசாங்கம் வீழ்ச்சியடைந்தாலும் நாட்டை வீழ்ச்சியடைய செய்யவில்லை. இவ்வாறான நிலையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரசாங்கத்தை கையளித்து நிலைமைகளை சீர் செய்வதற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கினோம்.

நாட்டின் தேசியத்துக்கும், இராணுவத்தினருக்கும் எதிரான தீர்மானங்களை ஒருபோதும் எடுக்க முடியாது. சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடவும், குறுகிய நோக்கங்களுக்காக செயற்படவும் நாங்கள் தயாராகவில்லை என்பதால் தனித்து தீர்மானங்களை எடுத்துள்ளோம். சவால்களை கண்டு நாங்கள் அச்சமடையவில்லை. சவால்களை நான் விரும்புகிறேன். எவர் மீதும் சேறு பூசவில்லை. கொள்கைகளை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறோம்.

தேசிய உற்பத்திகளை நிச்சயம் மேம்படுத்துவோம். விவசாயத்துறையில் இருந்து எமது தேசிய உற்பத்தி எழுச்சியை முன்னெடுப்போம். விவசாயிகளை ஊக்குவிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம். கடன் பெற்று உணவு வழங்குவது சிறந்த பொருளாதார கொள்கையல்ல, விவசாயிகளின் பொருளாதாரத்தை பலப்படுத்துவோம்.

இலங்கை ஒற்றையாட்சி நாடு. நாட்டின் ஒற்றையாட்சியை பாதுகாக்கவே வீரர்கள் போரிட்டார்கள். நாங்கள் அரசியலில் இருக்கும் வரை இந்த நாட்டில் எல்லை கிராமங்கள் தோற்றம் பெறுவதற்கு இடமளிக்க போவதில்லை. இந்த பௌத்த நாட்டில் அனைத்து மதங்களுக்கும் முன்னுரிமை மற்றும் கௌரமளிக்க தயார். அதனை செய்வோம். அதேபோல் மாகாண சபைக்குள் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை ஒருபோதும் வழங்கமாட்டோம்.

தேர்தல் காலத்தில் வடக்கில் உள்ளவர்களை ஏமாற்ற வேண்டிய தேவை கிடையாது. முடிந்ததை முடியும் என்பேன்,முடியாததை முடியாது என்பேன்.

தமிழர்களின் கலாச்சாரத்தை பாதுகாப்பேன். மொழி உரிமையும் வழங்குவோம். ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை ஒன்றிணைத்து காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை ஒருபோதும் வழங்கமாட்டோம் என்றார்.

Related posts

மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு

அரசியல் யாப்பு குழு அதிகாரத்தை பகிர்வது தொடர்பாக பேச்சுவார்த்தை – பிரதமர்

Three suspects arrested for stealing iron from Hambantota Harbour