உள்நாடுசூடான செய்திகள் 1

தமிழர்களின் சமஷ்டியை விஞ்ஞாபனத்தில் தெளிவுபடுத்த வேண்டும் – ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கோரிக்கை

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை வழங்குவது குறித்து ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவுபடுத்த வேண்டும் எனவும், சாதகமான தீர்வு எதனையும் முன்வைக்காதவிடத்து தமிழர்கள் சார்பில் பொது வேட்பாளரொருவரைக் களமிறக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும் எனவும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு இப்போதே அரசியல் கட்சிகள் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும் நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் எவையும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து இதுவரையில் எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு உத்தேசித்திருக்கும் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், தமிழர்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தமது நிலைப்பாடு என்னவென்பதை தற்றுணிவுடன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவுபடுத்தவேண்டுமென சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.

அத்தீர்வானது இணைந்த வட, கிழக்கில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யக்கூடியவாறான சமஷ்டி அடிப்படையிலான தீர்வாக அமையவேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ள அவர், அத்தீர்வினை வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடுவதன் ஊடாக அதனை சிங்கள மக்களுக்கும் கொண்டுசெல்ல வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் தீர்வு பற்றிய நிலைப்பாட்டை வெளியிடும் பட்சத்தில் அதுகுறித்து தமிழர்கள் பரிசீலிக்க முடியும் எனவும், இல்லாவிடின் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும் எனவும் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுமா?

தோட்ட நிர்வாகத்தின் தான்தோன்றி தனமான செயற்பாடு: தொழிலாளர்களுக்கு நேரடியாக சென்று தீர்வு பெற்றுக்கொடுத்த ஜீவன்

முன்னாள் பிரதமர் உள்ளிட்ட நால்வருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு