சூடான செய்திகள் 1

தனது வெற்றிக்கு ஹகீம் ஆதரவு வழங்குவதை பெரிதும் மதிக்கிறேன் – சஜித்

(UTVNEWS|COLOMB0) -எனது தந்தையின் வெற்றிக்கும் தந்தைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றப் பிரேரணையை முறியடிப்பதற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஒத்துழைப்பு வழங்கியதுபோல, தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் தனது வெற்றியை முன்னிட்டு ஆதரவு வழங்குவதை பெரிதும் மதிப்பதாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று(02) இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனான கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது படையினர் நிலைகொண்டுள்ள மற்றும் வனபரிபால திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள வட, கிழக்கு முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பாகவும், வெளியேற்றப்பட்டு இடம்பெயர்ந்து வாழும் வட மாகாண முஸ்லிம்களின் நிலைமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், புத்தளத்தில் அறுவைக்காடு குப்பை பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும், முஸ்லிம்களுடைய பாதுகாப்பை உரியமுறையில் உத்தரவாதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

நாடளாவிய ரீதியில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் பற்றி கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதிநிதிகளாலும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.

இவற்றுக்கு பதிலளிக்கும்போது ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச கூறியதாவது;

அரசியல் மற்றும் பூகோள ரீதியில் நெருக்கடிகளுக்குள்ளாகியிருக்கும் இலங்கையை உன்னத நிலைக்கு கொண்டுவருதில் நான் கூடுதல் கவனம் செலுத்துவேன். நாட்டுப் பிரஜைகளான பௌத்தர்களும், இந்துக்களும், முஸ்லிம்களும் எனது நம்பகத்தன்மை பற்றி கிஞ்சித்தும் சந்தேகிக்கவோ அதுபற்றி இருமுறை சிந்திக்கவோ தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்தை நான் ஆதரிப்பவனல்ல. ஆனால், அளுத்கம, அம்பாறை மற்றும் திகன முதலான சம்பவங்கள் ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலுக்கு வழிகோலியுள்ளதாக நம்பப்படுகின்றது.

மேலும், குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் பின்னணியின் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்த தீய சக்திகள் செயற்பட்டுள்ளன.

உண்மையான, நேர்மையான பௌத்தராக எனது தந்தை என்னை வளர்த்ததால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று நாட்டில் வாழும் சகல இன மக்களுக்கும் சேவையாற்ற திடசங்கற்பம் பூண்டுள்ளேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Related posts

விண்ணப்ப முடிவுத் திகதியில் மாற்றம்

மகளுக்கு நஞ்சு கொடுத்து தானும் நஞ்சருந்தி உயிரிழந்த தந்தை

தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பு