உள்நாடு

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நத்தார் தின வாழ்த்துச் செய்திகள்

(UTV | கொழும்பு) –  உலக வாழ் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்களுடன் இலங்கை வாழ் கத்தோலிக்க, கிறிஸ்தவ மக்களும் இணைந்து இன்று இயேசுவின் பிறப்பு விழாவான நத்தார் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான கிறிஸ்தவர்களின் உள்ளங்களில் இறைவன் மீதான பக்தியுணர்வை தூண்டும் இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது உயிர்ப்பு விழாவுக்கு அடுத்ததான உன்னதமான சமயப் பண்டிகையாகும் என தனது வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இது இயேசு நாதர் போதித்த மற்றும் நடைமுறையில் வாழ்ந்துகாட்டிய அமைதி, அன்பு, இரக்கம், சகவாழ்வு, கருணை போன்ற பண்பட்ட மனித சமூகத்தின் அடித்தளத்தை வடிவமைக்கும் உன்னத பெறுமானங்களை உள்ளடக்குகிறது.

சமூக ரீதியாக, நத்தார் கிறிஸ்தவ குடும்பங்கள் ஒன்றுகூடுவதற்கும், பரிசுகளை பரிமாறிக்கொள்வதற்கும், பகைமைகளை மறந்து பிணைப்பினை புதுப்பிப்பதற்குமான ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பமாகும்.

இயேசு பிரான் போதித்த சமய நெறிகள் சமூகத்தின் நிலைத்தன்மைக்கு பங்களிக்கும் பல போதனைகளை கொண்டுள்ளது.

பாவத்தின் இருளகற்றி, புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு சகோதர வாஞ்சையுடன் உதவுவது மற்றும் அனைத்து மனிதகுலத்தின் மீட்பிற்கான அர்ப்பணிப்பு என்பவை இவற்றில் முதன்மையானவை என்று நான் எண்ணுகிறேன்.
கோவிட் -19 தொற்றுநோய் நிலைமைகளுக்கு மத்தியில் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார ரீதியாக செயலற்றிருக்கும் உலகை மீண்டும் எழுச்சி பெறச்செய்ய இந்த நன்நெறிகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஒரு வருடத்திற்கும் முன்னர் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற கொடூர தாக்குதலின் கடுமையான வலிகளை சுமந்தவாறே இந்த நாட்டின் கிறிஸ்தவ மக்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடுகிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

ஆயினும்கூட, அந்த அச்சங்களையும் பாதுகாப்பற்ற தன்மையையும் அகற்றுவதற்கும், அச்சம், சந்தேகம் இல்லாமல் அனைவரும் சமயக் கிரியைகளில் ஈடுபடுவதற்கான சூழலை உருவாக்குவதற்கும் எமக்கு முடிந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியும் அவ்வாறே வழங்கப்படும்.

இயேசு கிறிஸ்து போதித்த அமைதி மற்றும் அன்பின் நற்செய்தி உலகெங்கும் பரவட்டுமாக! இலங்கை வாழ் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் மகிழ்ச்சியான எனது நத்தார் நல்வாழ்த்துக்கள் என தனது வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நத்தார் பண்டிகை இயேசு கிறிஸ்துவின் பிறப்பையும், இறைவன் மனு குலத்திற்காக மண்ணில் உதித்ததையும் நினைவுப்படுத்துகின்றது. இது மனித அன்பையும், கௌரவத்தையும் நினைவூட்டும் ஒரு நற்செய்தியாகும் என பிரதமர் தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புனிதமான நாளில் அமைதி மற்றும் கருணையின் செய்தி நம் இதயங்களில் உறுதியாக விளங்க வேண்டும். ஏழை மக்கள் மற்றும் குழந்தைகளை தேடிச் சென்று அவர்களுடன் நத்தார் பண்டிகையை கொண்டாடுவதற்கு ஆன்மீக ரீதியில் மனதை ஈடுபடுத்தும் ஒரு ஆழமான விடயம் இந்த நத்தார் பண்டிகையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எனவே, இவ்வாறானதொரு உன்னத தினத்தில், எவரும் அறிந்திராத பெத்லகேம் நகரில் ஒரு மாட்டுத்தொழுவத்தில் பனி கலந்த வாடைக்காற்றின் குளிரில் பிறந்த குழந்தையை தேடிச் செல்வது அர்த்தமுள்ள நத்தாருக்கு வழிவகுக்கும் என்பது எனது நம்பிக்கையாகும்.

இந்த நத்தார் தினத்தில் இலங்கை மற்றும் உலக வாழ் அனைத்து கிறிஸ்தவர்களது இல்லங்களிலும், உள்ளங்களிலும் அமைதியும், ஆரோக்கியமும் நிறைந்து விளங்க நான் மனதார பிரார்த்திக்கிறேன்.

அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள் என பிரதமர் தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஒரே தடவையில் தீர்வு வழங்க பிரதமர் இணக்கம்

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 50, 000 பேருக்கு எதிராக வழக்கு

UPDATE : கருணா இதுவரையில் CID இல் முன்னிலையாகவில்லை