அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவுடன் இணைந்து செயற்படத் தயார் – சுமந்திரன்

தமிழர் இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் 2015 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரையில் மேற்கொள்ளப்பட்ட வரைவை தான் பூர்த்தி செய்வேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எழுத்துப்பூர்வாக கூறியிருக்கிறார்.

இந்த விடயத்தில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் இணங்கி செயற்பட தாம் தயாராக இருப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆற்றல் கொண்ட, அனுபவம் வாய்ந்த புது முகங்களையும் இளைஞர்கள் மற்றும் பெண்களையும் களமிறக்கும் என்றும் அதுதொடர்பில் மத்திய செயற்குழு இறுதித் தீர்மானம் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் அடுத்தக் கட்ட நகர்வுகள் குறித்து நேற்று (26) விளக்கமளித்து உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும்,

தற்போது ஆட்சிப் பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பல மாற்றங்களை கிரமமாக மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் பொதுத் தேர்தலுக்கு பின்னரும் அவர்களால் ஒரு உறுதியான ஆட்சியை முடியுமாக இருந்தால் அவர்களின் முன்னேற்றகரமான விடயங்களுக்கு எங்களின் ஆதரவு இருக்க வேண்டும். அதற்கான ஆதரவு இருக்கும்.

ஏனென்றால் இதுபோன்ற பல விடயங்களை நாங்களாகவே பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறோம். அதற்காக பாடுபட்டிருக்கிறோம்.

தமிழர் இனப் பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்திலும் கூட 2015ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரையிலான முயற்சியினுடைய வரைவை தான் பூர்த்தி செய்வேன் என்று எழுத்துப்பூர்வாக கூறியிருக்கிறார்.

ஆகையால், இந்த விடயங்கள் தொடர்பில் அவர்களுடன் சேர்ந்து இணங்கி செயலாற்றுவதற்கும் ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் நிச்சயமாக வாய்க்கும். நாங்களும் அதனை செய்ய வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்புமாகும்.

அதேபோன்று, இந்தமுறை பொதுத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி போட்டியிடுவதில் எவ்வாறு செயற்படும் என்ற கேள்வி உருவாகியுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றகரமான மாற்றங்கள் நிகழ்கின்ற சந்தர்ப்பத்தில் எங்களுடைய பிரதேசங்களிலும் அந்த மாற்றங்கள் நிகழுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

மாற்றங்கள் என்று கூறும்போதும் நேர்மையானவர்கள், ஊழல் அற்றவர்கள், நிரந்தர அரசியல்வாதிகளை அப்புறப்படுத்திவிட்டு இளையவர்கள், பெண்கள், ஆற்றல் உள்ளவர்கள், அனுபவம் வாய்ந்தவர்களை சரியான விதத்தில் நேர்மையானவர்களை அடையாளம் கண்டு கட்சிகள் முன்னிறுத்துமா என்பது மக்கள் மத்தியில் இருக்கும் பாரிய அங்கலாய்ப்பாக இருக்கிறது.

அதனை புரிந்து கொண்டவர்களாக எங்களின் கட்சி புதிய முகங்களையும் ஆற்றல் உள்ளவர்களையும் முன்னிருத்த வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடாகும். கட்சியிலும் பலரிடம் இதுபோன்ற சிந்தனைகள் இருக்கின்றன.

அதையும் எங்கள் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானிக்கும். ஆனால், மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்குமென்று கருதுகிறேன் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

பலமான மாற்றுத்தெரிவு சங்குச் சின்னமே – சிவசக்தி ஆனந்தன்

editor

சாணக்கியனுக்கு எதிராக சீன தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்

ஈரான் ஜனாதிபதியின் விமானத்தால், கட்டுநாயக்காவில் ஏற்பட்ட குழப்பம்