தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறாத உள்ளுராட்சிமன்றங்களுக்கு நிதி ஒதுக்கப்படாது என ஜனாதிபதி குறிப்பிடுவது ஒழுக்கத்துக்கு முரணானதாகும்.
இது தொடர்பில் செய்திகளை வெளியிடும் ஊடகங்களையும் ஜனாதிபதி அச்சுறுத்துகின்றார்.
ஜனாதிபதியால் தெரிவிக்கப்படும் இந்த கருத்துக்கள் முற்றுமுழுதாக தேர்தல் சட்டத்துக்கு முரணானதாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வருண தீப்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேர்தல் பிரசார மேடைகளில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொய்களைக் கூறுவது மாத்திரமின்றி, அச்சுறுத்தல்களையும் விடுக்கின்றார்.
இவை மாத்திரமின்றி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பழைய கதைகளையும் தேடுகின்றார்.
அதற்கமைய மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் அந்த மாவட்டங்களின் அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி கூறிய விடயங்கள், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டங்களாகும்.
முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது மாத்திரமின்றி கடந்த காலங்களில் அவர் கூறியவற்றையும் தற்போதைய ஜனாதிபதி மீளக் கூற ஆரம்பித்திருக்கின்றார். தற்போது அநுரகுமார திஸாநாயக்க, அநுர விக்கிரமசிங்கவாகியிருக்கின்றார்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் தமக்கு வாக்களிக்காவிட்டால் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அச்சுறுத்துகின்றார்.
நாட்டில் பொறுப்புள்ள எந்தவொரு அரசியல்வாதியும் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதில்லை. கடந்த ஆட்சி காலங்களில் திஸ்ஸமகாராம பிரதேசசபையை ஜே.வி.பி. கைப்பற்றியது.
ஆனால் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமோ, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கமோ திஸ்ஸமகாராம பிரதேசசபையை ஜே.வி.பி.யின் சபையாகக் கருதவில்லை. ஏனைய பிரதேசசபைகளைப் போன்றே அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது.
எனவே தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறாத உள்ளுராட்சிமன்றங்களுக்கு நிதி ஒதுக்கப்படாது என ஜனாதிபதி குறிப்பிடுவது ஒழுக்கத்துக்கு முரணானதாகும்.
இது தொடர்பில் செய்திகளை வெளியிடும் ஊடகங்களையும் ஜனாதிபதி அச்சுறுத்துகின்றார். ஜனாதிபதியால் தெரிவிக்கப்படும் இந்த கருத்துக்கள் முற்றுமுழுதாக தேர்தல் சட்டத்துக்கு முரணானதாகும் என்றார்.
-எம்.மனோசித்ரா