அரசியல்உள்நாடு

சுதந்திரத்தின் மூலம் நாம் பெற்றுக்கொண்ட ஜனநாயகத்தை இந்த தருணத்தில் வலுப்படுத்துவது நமது பொறுப்பாகும் – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

77வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில், சுதந்திரம் மற்றும் அதன் பின்னர் நமது தாய்நாடு கடந்து வந்த காலகட்டத்தை மீண்டும் நினைவுகூர்வது அவசியமாகிறது.

சுதந்திரம் பெற்ற தருணத்தில், நாம் ஒரு நாடாக வறுமை, நோய்கள் மற்றும் அறியாமையிலிருந்து விடுபட்டு சுதந்திர நாடாக எழுச்சி பெறுவதன் தேவை அடிப்படையானதாக இருந்தது. இதற்காக சுதந்திரத்திற்குப் பின்னர் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

இலவசக் கல்வி மூலம் நாடு முழுவதும் பாடசாலை முறைமைகள் மற்றும் பல்கலைக்கழக முறைமைகள் வலுப்படுத்தப்பட்டன. இதன் விளைவாக 1948இல் 35% ஆக இருந்த கல்வியறிவு விகிதம் இன்று 95% ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், 1948இல் 45 ஆண்டுகளாக இருந்த ஆயுட்காலம் இன்று 75 ஆண்டுகளைக் கடந்துள்ளது இது சுகாதாரத் துறையின் வெற்றியாகும். மேலும், விவசாயத்தை மேம்படுத்த தொடங்கப்பட்ட விவசாய குடியேற்றத் திட்டங்கள் மற்றும் மகாவலி போன்ற விரைவான அபிவிருத்தித் திட்டங்கள் மூலம், இன்று ஒரு ஹெக்டயார் காணியில் கிடைக்கும் நெல் விளைச்சல் 350 கிலோவிலிருந்து 3500 கிலோ வரை அதிகரித்துள்ளது. இதற்கு மேலதிகமாக, காணிகள் இல்லாத மக்களுக்கு காணி உரிமை வழங்குதல் மற்றும் பல நீர் மின் நிலையங்களைத் தொடங்குதல் ஆகியவற்றுடன் வலுசக்தித் துறையில் ஏற்பட்ட மறுமலர்ச்சி மூலம் புதிய உலகம் நோக்கி நமது நாடு முன்னேறியதோடு, அதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தையும் விரிவடைந்து, 1994இல் இலங்கை மனித அபிவிருத்தி தசாப்தத்தில் முதலிடத்தைப் பெற்றது.

1994இல் இலங்கை தென் கொரியா, மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுடன் சமநிலையில் இருந்தபோதிலும், அது மாற்றமடைவதற்கு காரணமான அரசியல் கருத்தியல்கள் என்ன என்பதை நாம் இப்போது ஆழமாக ஆராய வேண்டும்.

அதிகாரத்தைப் பெறுவதற்கான குறுகிய நோக்கங்களுடன் இந்த வெற்றிகளை மறைத்த அரசியல் மாயைகள் காரணமாக இன்று நாடு எதிர்கொள்ளும் கடுமையான சவால்களை விமர்சன ரீதியாக ஆராய்வது, நாம் பெற்ற சுதந்திரத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்க உதவும். பழைய பிரச்சினைகளுக்கு பழைய தீர்வுகள் அல்ல, புதிய தீர்வுகளை வழங்கி, சுதந்திரத்திற்குப் பின்னர் நாம் உரிமையாகப் பெற்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவது இந்த தருணத்தில் நமது பொறுப்பாகும்.

இதற்காக நிகழ்காலத்தை சரியாக புரிந்து கொண்டு இனவாத மதவாத குறுகிய சிந்தனைகளை தோற்கடித்து ஒன்றிணைவதற்கு இந்த சுதந்திர தினத்தில் உறுதியேற்போம்.

சஜித் பிரேமதாச,
இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர்.

Related posts

அஜித் பிரசன்ன உட்பட இருவர் மீண்டும் விளக்கமறியலில்

ஜனாதிபதி அநுரவை சந்தித்த முன்னாள் எம்.பி ஶ்ரீதரன்

editor

திஸ்ஸ நாகொடவிதான காலமானார்