அரசியல்உள்நாடு

சிறிய கார் கனவும் கனவாகியே போய்விட்டது – IMF என்ன சொன்னாலும் சரி என்று சொல்லும் அரசாங்கமே இது – சஜித் பிரேமதாச

கடந்த தேர்தல் காலத்தின் போது பேரின மற்றும் நுண் பொருளாதாரத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும், அது தொடர்பாக பல தொடர் வாக்குறுதிகளையும் சமூக ஒப்பந்தத்தின் மூலம் வளமான நாடு, அழகிய வாழ்க்கை என்ற கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்த போதிலும், அந்த சமூக ஒப்பந்த கொள்கைத் திட்டம் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. கொள்கைப் பிரகடனத்தின் மூலம் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டாலும் இன்றளவில் அவை மீறப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் தேர்தல் காலத்தில் புதிய கடனை உறுதிப்படுத்தும் உடன்படிக்கைக்கு செல்வதாக கூறிய போதிலும், அது கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டாலும், கடைசியில் அவ்வாறான புதிய உடன்படிக்கைக்கு செல்லாமல், கடந்த அரசாங்கம் உருவாக்கிய நாட்டையும் நாட்டு மக்களையும் மிகவும் அடக்குமுறைக்கு உள்ளாக்கும், சாதாரண மக்களின் தோள் மீது சுமையைச் சுமத்தி மக்களை பழிவாங்கும் ஐஎம்எப் உடன்படிக்கைக்கும், இரு தரப்பு கடன் உடன்படிக்கைக்கும், சர்வதேச பிணைமுறி தாரர்களுடன் உடன்படிக்கைக்கும் சென்றதாகவும், ஐஎம்எப் கூறுகின்ற வசனங்களுக்கு நடனமாடுகின்ற, ஐஎம்எப் இன் கைப்பாவையாக இந்த அரசாங்கம் உருவாகியிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வரவு செலவுத்திட்ட பொருளாதார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் இன்று (20) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சி 5% இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும். 2028 ஆம் ஆண்டளவில் நாடு கடனைத் திருப்பிச் செலுத்தும் நிலைக்கு வரும் போது இந்த பொருளாதார வளர்ச்சி வேகத்தை நிறைவு செய்ய வேண்டும். இதனை 5% அல்ல அதனையும் விட அதிகரிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்கின்ற போதிலும், இந்த பொருளாதார வளர்ச்சி வேகத்திற்கூடாக நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியை மேம்படுத்துகின்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் போதுமானதாக இல்லையென்றும் எதிர்கட்சித் தலைவர் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஐஎம்எப் என்ன சொன்னாலும் சரி என்று சொல்லும் அரசாங்கமே இது!

இந்த அனைத்து அம்சங்களையும் நாம் பார்க்கும் போது, ​​ஐ.எம்.எப் என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் மக்களின் ஆணையை அப்பட்டமாக மீறும் ஒரு அரசாங்கம் நாட்டில் இருப்பதாகவும், ஏற்றுமதி மேம்பாடு இன்றியமையாத விடயம் என்றும், அதன் மூலம் தொழில்களை உருவாக்குவதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் அதன் பலன்களை நாடு பல வழிகளில் பெற்றுக்கொள்ளும் என்றும், அதற்கான வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எமது நாட்டுக்கு அதிக சதவீத முதலீடும், முதலீட்டு ஊக்குவிப்புத் திட்டமும் தேவை. அரசாங்கத்திற்கு அப்படியொரு விடயம் இருக்குமானால் அதனை முன்வைக்குமாறும், வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, இந்தியா போன்ற நாடுகளுடன் போட்டிபோட்டு முந்திச்சென்று அதிக முதலீடுகளை நம் நாட்டிற்கு கொண்டு வரக்கூடிய வேலைத்திட்டம் ஒன்று இருக்க வேண்டும் என்ற போதிலும் அரசாங்கத்திடம் அவ்வாறான வேலைத்திட்டம் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பின் போது மக்களுக்காக முன் நின்ற தலைவர்கள் எங்கே?

உழைக்கும் வர்க்கத்தினருக்காக தற்போதைய அரசாங்கத்தைப் போன்று குரல் உயர்த்தி கூச்சலிட்ட கூட்டம் இல்லையென்றாலும், கடந்த அரசாங்கம் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயற்பாட்டின் போது உழைக்கும் மக்களின் நிதியைச் சுரண்டும்போது அதனை மாற்றுவோம் என்று சொன்னாலும், ஆட்சிக்கு வந்த பிறகு அதை மறந்துவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரஜைகளுக்கு வழங்கிய 15% வட்டி வருமானத்தை திருப்பித் தருமாறு கோரிய போதும், இந்த வரிக்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கு தக்கவைத்தல் வரியை அதிகரித்திருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருப்பதாகவும், நாட்டில் உள்ள சராசரி முதியோர் சமூகத்தின் ஓய்வு பெற்ற சமூகத்தினருக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லாததற்கு காரணம் ஐஎம்எஃப் ஆ?

35,000 பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வுகள் வழங்கப்படாதது ஐஎம்எப் இன் ஆலோசணைகளை பின்பற்றுவதனாலா என கேள்வி எழுப்புவதாகவும், எரிபொருள் நிவாரணம் பெருமளவில் வழங்கப்படுவதாக கூறப்படுகின்ற போதிலும் அது இன்னும் கிடைக்கவில்லை எனவும், இந்த நாட்டின் உயர்மட்ட பணக்காரர்களைத் தவிர்த்து சாதாரண மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்திற்கு அரசாங்கம் செல்ல வேண்டும் எனவும், அந்த எதிர்பார்ப்புக்களை சிதைக்க வேண்டாம் என கோரிக்கை விடுப்பதாகவும் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்கள் மிகவும் அநாதரவான நிலைக்கு உட்பட்டிருப்பதால் அவர்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்துமாறும் எதிர்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50%க்கும் மேல் பங்களிக்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழிலாளர்களது எதிர்பார்ப்புக்களை சிதைக்க வேண்டாம் எனவும், தேர்தலின் போது அளித்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிறிய கார் கனவும் கனவாகியே போய்விட்டது.

வாகனமொன்றின் உரிமை பெற்றுத்தரப்படும் என்று சொன்னது போல் அது இன்று நடக்காமல் இருப்பதாகவும், 12 இலட்சத்தில் சிறிய கார் வாங்கலாம் என்ற மாபெரும் அறிவிப்பு இன்று கனவாகிவிட்டதாகவும், அந்த வாக்குறுதியை கூட சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையில் மறந்துவிட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மரண அடி

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகரித்து, நிலக்கரி டீசல் மாபியாவை இல்லாதொழிப்போம் என்று கூறினாலும், சூரிய சக்தித் துறையில் வர்த்தகர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் இன்று நடைமுறைப்படுத்தப்படாமல், சூரிய சக்தி மூலம் வழங்கப்படும் கொள்முதல் தொகை இன்று குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மரண அடி விழுந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

புகிங்.கொம் இற்கு வரி விதிக்கும் முன் சுற்றுலாத் தொழிற்றுறையைப் பற்றி சிந்தியுங்கள்.

Booking.com இற்கு புதிய வரியை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அந்த வரி குறித்து பேசும் போது, ​​சுற்றுலாத்துறையில் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் குறித்து சாத்தியவள ஆய்வு நடத்தப்பட்டுள்ளதா என்று தெரிந்துகொள்வது அவசியம் எனவும், Booking.com ஊடாக இந்நாட்டின் சுற்றுலாத்துறைக்கு கிடைக்கும் பலம் இழக்கும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

Related posts

வெளிநாட்டு ஆசையால் ஏமாறும் மக்கள் – பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

மதுபான சாலைகளை மீண்டும் திறக்க அனுமதி

தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோருக்கு விசேட அறிவித்தல்.