நாட்டின் கைத்தொழில் துறையில் கணிசமான பங்களிப்பைப் பெற்றுத் தரும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கம் உட்பட முன்னைய எந்த அரசாங்கங்களும் நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை.
இலங்கை உட்பட பல நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர தீர்வை வரி விதிப்பால் இந்த தொழிற்துறையினர் மாத்திரமல்லாது ஒட்டுமொத்த தொழில் துறைகளும் தற்போது கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
எனவே நாட்டின் ஒட்டுமொத்த தொழில்துறையினரை பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பராட்டே சட்டம் மீண்டும் அமுலுக்கு வருவது தொடர்பில் நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் பாராளுமன்றத்தில் இன்று (08) கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
1990 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் வங்கிகளுக்கு காணப்படும் சொத்துக்களை ஏலம் விடுவதற்கான அதிகாரங்களை இடைநிறுத்திய காலம் 2025 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றன.
பராட்டே சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஏலம் விடும் அதிகாரங்களை இடைநிறுத்துவதை மேலும் நீட்டிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா ? என எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.
இந்த நுண், சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினருக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டே பராட்டே சட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. அவ்வாறு இருக்கையில், தற்போது அது மீண்டும் அமுலுக்கு வர இருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்தத் தொழிற்துறையினர் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதால் தான் இந்த சட்டத்தை இடைநிறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.
கடந்த காலத்தில் பராட்டே சட்டம் கைவிடப்பட்டிருந்தாலும் இதனால் வேறு தீர்வுகள் இவர்களுக்கு கிடைக்கவில்லை. ஆகவே இந்த பராட்டே சட்டத்தை இடைநிறுத்தி, இத்தரப்பினருக்கு நிலையான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
2024 மே 7 ஆம் திகதி அன்று கோப் குழு பரிந்துரைத்ததன் பிரகாரம், பராட்டே சட்டம் மற்றும் அதன் நோக்கங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வரைபடத்தை மத்திய வங்கி தயாரித்துள்ளமையினால் அதனை சபையில் சமர்ப்பிக்குமாறும், கடந்த 5 ஆண்டுகளில், நுண், சிறய மற்றும் நடுத்தர வியாபாரிகள், தொழில்முயற்சியாளர்கள் போலவே பாரிய மட்ட தொழில்முயற்சியாளர்களினது எத்தனை சொத்துக்கள் ஏலத்தில் விடப்பட்டன என்பது தொடர்பான விபரங்களை சபையில் முன்வைக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக்கொண்டார்.
தொழில்முயற்சிகளை நடத்திச் செல்லும் வகையில் செயல்பாட்டு மூலதனத்தை பெற்றுக் கொடுங்கள்.
அரசாங்கத்தால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 263,000 நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், அவர்களுக்கு புத்துயிர் அளிப்பதற்கும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாது என எதிர்க்கட்சித் தரைவர் இங்கு கேள்வி எழுப்பினார்.
பராட்டே சட்டத்தின் கீழ் வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை இடைநிறுத்துவது மட்டுமன்றி, கடந்த காலங்களில் நிரந்தரமாகவும் தற்காலிகமாகவும் மூடப்பட்ட நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறைகளை புத்துயிர் பெறச் செய்வதற்கு ஈடுகட்டக்கூடய விதத்திலான செயல்பாட்டு மூலதனத்தை வழங்குவது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினரை இனுமேலும் அலைக்கழிக்க வேண்டாம்.
நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறையினர் கடனை தொடர்ச்சியாக கட்டாத காரணத்தால் அவர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆகவே, இவர்களது இந்தக் கடன்களை மறுசீரமைக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன ? என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.
இந்த நுண், சிறிய, நடுத்தர தொழில்துறையினரை பலமுறை அமைச்சுக்களுக்கு அழைத்து வந்து முடிவுகள் எடுக்கப்பட்டாலும், வங்கிகளுக்கு அரசாங்கம் பரிந்துரைகளை வழங்காமையினால் அவர்கள் மேலும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே இவர்களை தொடர்ந்தும் சும்மா அலைக்கழிக்காமல் நிலையான தீர்வுகளை பெற்றுக் கொடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
ஜனாதிபதி டிரம்பின் வரிக் கொள்கை தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன?
ஐக்கிய அமெரிக்கா குடியரசு பரஸ்பர தீர்வை வரிகளை விதித்துள்ளது. அமெரிக்கப் பொருட்களுக்கு இலங்கை நாடு 88% வரி விதித்தமையால், அமெரிக்கா எம்மீது 44% வரியை விதித்துள்ளது.
இதனால் நமது நாட்டின் ஏற்றுமதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆனபடியால், பிரதமர் மோடியை சந்தித்தபோது, இந்திய சந்தையில் நமது நாட்டின் ஏற்றுமதிக்கு உள்ள தடைகளை நீக்குமாறு கோரிக்கை விடுத்தேன்.
இந்த பாரதூரமான நிலைமை முழு நாட்டையும் பாதிக்கும் என்பதை சுட்டிக்காட்டினேன்.
இந்தப் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தின் தீர்வு என்ன ? என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.
சர்வ கட்சி மாநாட்டை கூட்டுங்கள்.
இந்த வரி ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. ஏதேனும் ஒரு வகையில் இது விதிக்கப்பட்டால், நமது நாட்டின் பொருளாதாரம் மந்தநிலைக்கு வந்து, பொருளாதார ரீதியாக செயலற்ற நிலைக்கு வருவோம்.
எனவே, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த கட்சிகளையும் ஒன்றிணைத்துக் கொண்டு சர்வ கட்சி மாநாட்டை நடத்தி தீர்வுக்கு வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமது யோசனையையும் இங்கு முன்மொழிந்தார்.