அரசியல்உள்நாடு

கூட்டுறவுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி படுதோல்வி

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் அமோக வெற்றியீட்டிய தேசிய மக்கள் சக்தி, 2025 ஹோமாகம கூட்டுறவுத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

அதன்படி, ஹோமாகமவின் 59 கூட்டுறவு சமாசங்களில் தேசிய மக்கள் சக்தியால் 17 சமாசங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. தேசிய மக்கள் சக்தி ஆட்சி மீதான மக்கள் அதிருப்தி காரணமாக உள்ளூராட்சி நிர்வாகங்களில் தேசிய மக்கள் சக்திக்கு பின்னடைவு ஏற்பட்டுவருவதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

அதற்கமைய, 2025 ஆம் ஆண்டுக்காக கூட்டுறவு சமாசங்களின் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி படுதோல்வியடைந்துள்ளதாக ஹோமாகம பிரேதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கமல் சந்தன தெரிவித்தார்.

ஹோமாகமவிலுள்ள 59 கூட்டுறவு பிரதேசங்களில் 17 பிரதேசங்களை மாத்திரமே தேசிய மக்கள் சக்தி வெற்றி ஈட்டியுள்ளது.

தாம் உள்ளிட்ட ஒன்றிணைந்த குழுக்கள் 59 பிரதேசங்களில் 31 பிரதேசங்களை வெற்றிக்கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கமல் சந்தனவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பிலேயே இதனைக் சுட்டிக்காட்டினார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

2025 இற்கான ஹோமாகம கூட்டுறவு சமாசங்களின் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அல்லது மக்கள் விடுதலை முன்னணியை படுதோல்வியடையச் செய்துள்ளோம்.

59 கூட்டுறவு பிரதேசங்களில் 17 பிரதேசங்களை மாத்திரமே தேசிய மக்கள் சக்தி வெற்றிக்கொண்டிருந்தது. ஒன்றிணைந்த குழுவினர் என்ற அடிப்படையில் 31 பிரதேசங்களை வெற்றிக்கொள்ளக் கூடியதாக இருந்தது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின்போது தேசிய மக்கள் சக்திக்கு அல்லது மக்கள் விடுதலை முன்னணி வெற்றியடைந்தபோது கூட்டுறவு சமாசங்களையும் தமது அதிகாரத்தின் கீழ் கொண்டுவருவோம் என்று கூறியே அவர்கள் முழு நாட்டுக்கும் அறிவித்திருந்தார்கள்.

ஆனால், இன்று ஹோமாகம தேர்தல் தொகுதியில் கூட்டுறவு சமாசங்களின் தேர்தலில் வெற்றியடைவதற்காக தேசிய மக்கள் சக்திக்கு எதிராக கட்சி பேதமின்றி கூட்டணி அமைத்துள்ளோம். இதனூடாக நாட்டுக்கு முன்னுதாரணத்தை கொடுத்துள்ளோம்.

எனவே, எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள செயற்பாடுகளில் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

ஹோமாகம கூட்டுறவு சமாசங்களின்; தேர்தலின்போது ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்தார்கள்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே இந்தத் தேர்தலில் நாங்கள் வெற்றியடைந்துள்ளோம். ஹோமாகம பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவரின் முகப்புத்தகத்தில், ஹோமாகம கூட்டுறவு சமாசங்கள் ஊழல் நிறைந்தவை என்று பிரசாரம் செய்துள்ளார்.

இதேபோன்றதொரு பிரசாரத்தையே ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் முன்னெடுத்திருந்தார்கள்.

இலங்கையில் இருக்கும் சிறந்த கூட்டுறவு பல்நோக்கு சமாசங்களில் ஹோமாகம கூட்டுறவு சமாசமும் ஒன்றாகும்.ஹோமாகம கூட்டுறவு சமாசம் அதிக இலாபத்தையும் உழைக்கிறது.

தேசிய மக்கள் சக்தி முன்வைத்த சகல குற்றச்சாட்டுக்களையும் தோற்கடித்து தேசிய மக்கள் சக்தியை தோற்கடிக்க இந்த ஒன்றிணைந்த அமைப்பு ஒத்துழைப்பை பெற்றுக்கொடுத்துள்ளது.

எனவே, ஹோமாகம கூட்டுறவு சமாசங்களின் இந்த வெற்றியை முன்னுதாரணமாக கொண்டு நாட்டின் தலைவர்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

-நா.தினுஷா

Related posts

மனித உரிமைகள் அழைக்கப்பட்டுள்ளார் டிரான் அலஸ்

தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை

மசகு எண்ணையின் விலை நிலவரம்