சூடான செய்திகள் 1

குரல் மூலம் பெரும்பான்மையை நிரூபிப்பது சிறந்த முறையல்ல…

(UTV|COLOMBO)-குரல் மூலம் நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிப்பது சிறந்த முறையாக அமையாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றைய சர்வகட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி குழுக் கூட்டம், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அத்துடன், முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் சர்வகட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

மேலும், அமைச்சர் தினேஸ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி, அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, அமைச்சர் உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய முதலான கட்சிகளும் இந்த சர்வகட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதேவேளை, இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என சபாநாயகர் கரு ஜயசூரியவும், ஜே.வி.பியினரும் முன்னதாகவே அறிவித்திருந்தனர்.

சர்வகட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் தாம் பங்கேற்கப்போவதில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்திருந்தது.

இதேநேரம், குறித்த கூட்டத்தில் தாம் பற்கேற்கப்போவதில்லை என கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்றைய சர்வகட்சி கூட்டம் குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சர்வ கட்சிகளுக்கிடையிலான சந்திப்பு சுமூகமான முறையில் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வரை நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் செயற்பட வேண்டிய முறை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள கட்சி தலைவர்களின் சந்திப்பின்போது உரிய தீர்மானத்தை எடுப்பதற்கும் நாடாளுமன்றத்தினுள் அமைதியாகவும் வன்முறையை தவிர்த்து செயற்படுவது தொடர்பிலும் அனைவரும் நேற்றைய தினம் இணக்கபாட்டுக்கு வந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தான் ஒரு நிலைப்பாட்டிற்கு வரவேண்டுமானால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அழைத்தோ அல்லது இலத்திரனியல் முறையை பயன்படுத்தியோ வாக்கெடுப்பை நடத்த வேண்டியது அவசியம் என்று ஜனாதிபதி இதன்போது அனைவரிடத்திலும் கேட்டுக்கொண்டார்.

அத்தகைய நடவடிக்கை நாட்டின் புத்திஜீவிகள், பொதுமக்கள் மற்றும் சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சிறந்த முறையாக அமையும்.

அரசாங்கத்தை மாற்றியமைப்பது போன்ற மிக முக்கிய விடயங்கள் தொடர்பில் முடிவுகளை மேற்கொள்ளும்போது நிலையியற் கட்டளைகளில் குறிப்பிட்டிருந்த போதிலும், குரல் மூலம் பெரும்பான்மையை நிரூபிப்பது சிறந்த முறையாக அமையாதெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் சபாநாயகர் முறையாக நடந்துகொள்வதில்லையென்றும், ஆளுங்கட்சித் தரப்பினர் நாடாளுமன்ற பணிகளை முன்னெடுக்க இடமளிப்பதில்லையென்றும் குற்றம் சுமத்தப்படுகின்றது.

இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் இணக்கமான நிலையை ஏற்படுத்த வேண்டும்.

நாடாளுமன்ற வளாகத்தை அண்டி, இரு தரப்பினரும் மக்களை ஒன்று திரட்டுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அத்தகைய நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்.

மக்கள் ஒன்று திரண்டால் மோதல்கள் ஏற்பட்டு அமைதியற்ற நிலை தோன்றும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கான கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று இடம்பெறவுள்ளது.

இன்றைய இந்த கலந்துரையாடலில் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

இன்று முதல் மின்சார விநியோகம் வழமைக்கு

பேருந்து கட்டண குறித்து ஆராய்வு

ஆளும் கட்சி உறுப்பினர்களை அவசரமாக அழைத்த ஜனாதிபதி ரணில்!