உள்நாடு

குப்பைத் தொட்டியில் போட வேண்டியவர்களை கட்சியில் அமரவைக்க முடியாது – சரத் பொன்சேகா

(UTV | கொழும்பு) –

தயா ரத்நாயக்க இராணுவ அதிகாரி என்பதால் அவரை கட்சியில் இணைத்துக் கொள்வதாக இருந்தால் கோட்டாபய ராஜபக்ஷவையும் கட்சியில் இணைத்துக் கொள்ள முடியும்.பொருளாதார நிபுணர் என்று குறிப்பிட்டுக் கொண்டு அஜித் நிவார்ட் கப்ராலையும் கட்சியில் இணைத்துக் கொள்ள முடியும். குப்பைத் தொட்டியில் போட வேண்டியவர்களை கட்சியின் முன்னிலையில் அமர வைப்பதை நான் ஏற்றுக்கொள்ள போவதில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் முக்கிய உயர் பதவிகளை வகித்த தயா ரத்நாயக்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளதை சமூக வலைத்தளங்கள் ஊடாக அறிந்துக் கொண்டேன். ராஜபக்ஷர்களின் செயற்பாடுகள் மற்றும் அவர்களின் நிர்வாகத்தை முழுமையாக புறக்கணிக்கும் இராணுவ அதிகாரிகள் மற்றும் ஓய்வுப் பெற்ற இராணுவ அதிகாரிகள் என்னை தனிப்பட்ட முறையில் சந்தித்து இவ்விடயம் தொடர்பில் பேசினார்கள்.இதை அவர்கள் வன்மையாக கண்டித்துள்ளார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தியில் புதிதாக இணைந்துக் கொண்டவர்கள் குறிப்பிட்ட கருத்துக்கள் தொடர்பில் ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன மற்றும் கபீர் ஹாசீம் ஆகியோர் அதிருப்தியடைந்திருந்தார்கள்.இவ்வாறான முரண்பாடுகள் கட்சியின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல,கொள்கைக்கு முரணாக செயற்பட்டால் சிறந்த இலக்கை அடைய முடியாமல் போகும் நிலை ஏற்படும்.

தயா ரத்நாயக்க தொடர்பில் நான் குறிப்பிட்ட விடயங்களை நாட்டு மக்களும்,இராணுவ அதிகாரிகளும் நன்கு அறிவார்கள்.வருபவர்கள் எல்லோரையும் கட்சியில் இணைத்துக் கொள்ளும் போது அவர்களின் கடந்த காலத்தை பற்றி ஆராய வேண்டும். தயா ரத்நாயக்க இராணுவ அதிகாரி என்பதால் அவரை கட்சியில் இணைத்துக் கொள்வதாக இருந்தால் கோட்டபய ராஜபக்ஷவையும் கட்சியில் இணைத்துக் கொள்ள முடியும்.இவ்வாறான நிலை நீடித்தால் பொருளாதார நிபுணர் என்று குறிப்பிட்டுக் கொண்டு அஜித் நிவார்ட் கப்ராலையும் கட்சியில் இணைத்துக் கொள்ள முடியும்.

கோட்டபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் இருந்தவர்கள் அனைவரையும் கட்சியில் இணைத்துக் கொண்டு அவர்களுக்கு பதவிகளை வழங்கி,அடுத்த தேர்தலில் வெற்றிப் பெறலாம் என்று நினைப்பது பிரச்சினைக்குரியது.மக்கள் இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை.குப்பைத் தொட்டியில் போட வேண்டியவர்களை கட்சியின் முன்னிலையில் அமர வைப்பதை நான் ஏற்றுக்கொள்ள போவதில்லை.கடந்த அரசாங்கத்தில் இருந்தவர்களை திருடர்கள் என்று விமர்சித்து விட்டு,அவர்களுடன் ஒன்றிணைந்து செயற்பட முயற்சிப்பது பிரச்சினைக்குரியது என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் புதிய தகவல்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் கோப் குழுவுக்கு