உள்நாடு

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் பாரிய ஊழல் – இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு.

(UTV | கொழும்பு) –

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் கொள்வனவு, வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் அச்சிடல் விடயங்களில் கடந்த சில வருடங்களாக பாரிய ஊழல் இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பாக உயரதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட வில்லை என தெரிவிக்கப்படுகின்றது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியுள்ளதாவது,
கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு வருடாந்தம் அரசாங்கத்தினால் பெருமளவு நிதி ஒதுக்கப்படுகின்றது. அதேபோல உலக வங்கி நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெறுகின்றன. யுனிசெப் நிதி ஒதுக்கீடுகளும் வருகின்றன. இந்த நிதி ஒதுக்கீடுகள் மூலம் மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களில் ஊழல்கள் இடம்பெற்று வருவதாகவும், இது தொடர்பாக உயரதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை எனவும் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தகங்கள் அதிக விலைக்கு அச்சிடப்பட்டுள்ளன. அதேகாலப் பகுதியில் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பாடப் புத்தகங்களின் செலவுகளோடு ஒப்பிடுகையில் இங்கு பாரிய அதிகரிப்பு இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இதனைவிட கல்வி வெளியீட்டுத் திணைக்களம் வெளியிட்ட புத்தகங்களில் வர்ணங்கள் இருக்கின்றன. தாளும் தரமானது. இங்கு அவ்வாறெல்லாம் இல்லை. அச்சிடப்பட்ட ஏ4 தாள்களும் அதிக விலைக்கு அச்சிடப்பட்டுள்ளன. இவ்வாறு பல ஆயிரக்கணக்கான புத்தங்கள், தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன. இவற்றில் மில்லியன் கணக்கான ரூபாய்கள் மேலதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளன.

பல மில்லியன் ரூபாய்களுக்கு கொள்வனவு செய்யப்பட்ட ஸ்மார்ட் போட்கள், மடிக்கணனிகள், கணனிகள், பிரிண்டர்கள் போன்றன குறித்து நுணுகி ஆராய்ந்து முறையான விசாரணைகளை முன்னெடுத்தால் அங்கும் பாரிய விலை வித்தியாசங்களைக் கண்டு கொள்ள முடியும் என்று கூறப்படுகின்றது. யுனிசெப் நிதி மூலம் முன்பள்ளிகளின் அபிவிருத்திக்கென வழங்கப்பட்ட நிதிகளிலும் பாரிய ஊழல்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் முன்பள்ளி பணியகம் இருக்கின்ற போதிலும் முன்பள்ளிகளின் அபிவிருத்திப் பணிகள் மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் அரச சார்பற்ற அமைப்புகள் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறித்தும் பாரிய சந்தேகங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வருடாந்தம் கல்வி அபிவிருத்திக்காக மில்லியன் கணக்கான ரூபாய்கள் செலவு செய்யப்பட்டுள்ள போதிலும் இன்னும் சில பரீட்சைகளில் மாகாணம் கடைசி நிலையில் இருப்பதற்கான காரணம் உரிய நிதி செலவுகள் தொடர்பான பின் மதிப்பீடுகன் செய்யப்படாமையாகும். இங்கு ஊழல்கள் இருப்பதால் தான் இந்த பின் மதிப்பீடுகள் செய்யப்படாமல் உள்ளன. அரசாங்கத்திடம் உண்மையான ஊழல் ஒழிப்பு நோக்கம் இல்லை. இருந்தால் இது போன்ற ஊழல்களை கண்டு பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிக நிதியை மீதப்படுத்தியிருக்கலாம். ஊழல் ஒழிப்பு என்று பொதுமக்களையும், ஐ.எம்.எப் பையும் ஏமாற்றும் பணிகளையே அரசாங்கம் செய்து வருகின்றது.  என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதியின் மஹா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி

அனுமதிப்பத்திரமின்றி மணல் கொண்டு செல்வோரை கைது செய்யுமாறு உத்தரவு

கொரோனா சிகிச்சைக்காக நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை