ஹமாஸ் அமைப்புடனான் முதல் கட்ட போர் நிறுத்தம் நேற்றுடன் (02) காலாவதியானதை அடுத்து காசாவுக்கான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் இஸ்ரேல் முடக்கியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தூதுவரான ஸ்டீவ் விட்கொப் முன்வைத்த தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றை நீடிப்பது தொடர்பிலான பரிந்துரையை ஹமாஸ் ஏற்க மறுத்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இதனை ஒரு ‘மலிவான மிரட்டல்’ என்று சாடி இருக்கும் ஹமாஸ் அமைப்பு, போர் நிறுத்த உடன்படிக்கைக்கு எதிரான சதிவேலை என்றும் உதவி விநியோகத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் என்று மத்தியஸ்தர்களையும் கேட்டுள்ளது.
எட்டப்பட்ட காசா போர் நிறுத்தத்தின்படி இரண்டாம் கட்ட உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு ஹமாஸ் அமைப்பு வலியுறுத்துகிறது.
பலஸ்தீன கைதிகளுக்கு பகரமாக எஞ்சிய இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டு காசாவில் இருந்து இஸ்ரேலியப் படை வாபஸ் பெறுவது மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றுக்கு வழிவகுப்பதாகவே இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் அமையும்.
எனினும் முதல் கட்ட போர் நிறுத்தத்தை நீடிப்பதற்கு இஸ்ரேல் விருப்பத்தை வெளியிட்டு வருகிறது. இரண்டாம் கட்டப் போர் நிறுத்தம் இறுதியாக நடைபெறுவதை மத்தியஸ்தர்களான அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து உறுதி அளிக்கும் வரை முதல் கட்ட போர் நிறுத்தத்தை நீடிப்பதை ஏற்க முடியாது என்று ஹமாஸ் அமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் நெதன்யாகு அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது, ‘கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கையின் முதல் கட்டம் முடிவுற்றதுடன் தொடர்ந்து பேசுவதற்கான விட்கொப்பின் திட்டத்திற்கு இஸ்ரேல் இணங்கிய நிலையில் ஹமாஸ் மறுத்த சூழலில் இன்று (02) காலை தொடக்கம் காசாவுக்குள் அனைத்து பொருட்கள் மற்றும் விநியோகங்கள் செல்வதும் நிறுத்தப்படுகிறது.
எமது பணக்கைதிகள் விடுவிக்கப்படாது போர் நிறுத்தம் ஒன்றுக்கு இஸ்ரேல் அனுமதிக்காது. ஹமாஸ் தொடர்ந்து மறுப்புத் தெரிவித்தால் மேலும் விளைவுகளை சந்திக்க வேண்டி ஏற்படும்.’
ஹமாஸ் பேச்சாளர் கூறியதாவது, ‘காசாவுக்கு உதவிகள் செல்வதை நிறுத்தும் நெதன்யாகுவின் முடிவு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கொடிய முகத்தை மீண்டும் ஒருமுறை காண்பிப்பதாக உள்ளது…. எமது மக்களை பட்டினியில் வைப்பதை நிறுத்துவதற்கு இஸ்ரேலிய அரசு மீது சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக முஸ்லிம்களின் ரமலான் மற்றும் யூதர்களின் பாசோவரை ஒட்டி சுமார் ஆறு வார காலத்திற்கு போர் நிறுத்தத்தை தொடர்வதற்கான அமெரிக்காவின் முன்மொழிவு ஒன்றுக்கு இஸ்ரேல் இணங்கியதாக நெதன்யாகு அலுவலகம் கடந்த சனிக்கிழமை (01) குறிப்பிட்டது.
இந்த காலகட்டத்தின் முடிவில் பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டால், போருக்கு திரும்ப இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது என்று எச்சரிக்கப்பட்டது.
எனினும் விட்கொப் தனது திட்டத்தை அவர் பொது வெளியில் முன்வைக்கவில்லை. இஸ்ரேல் கூறுவதன்படி, இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து எஞ்சிய உயிருடன் உள்ள மற்றும் மரணித்த பணக்கைதிகளின் பாதி எண்ணிக்கையானவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.
போர் நிறுத்தத்தை ஆறு வாரம் நீடிப்பது தொடர்பில் ஹமாஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டால் இஸ்ரேல் உடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் என்று நெதன்யாகு அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 19 ஆம் திகதி அமுலுக்கு வந்த முதல் கட்ட போர் நிறுத்தம் கடந்த சனிக்கிழமையுடன் (01) முடிவுக்கு வந்தது. 15 மாதங்களுக்கு மேல் நீடித்த காசா போரை நிறுத்தும் வகையிலான முதல் கட்ட போர் நிறுத்த காலத்தில் 33 இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் ஐந்து தாய்லாந்து நாட்டவர்களை ஹமாஸ் அமைப்பு விடுவித்த நிலையில் அதற்கு பகரமாக சுமார் 1,900 பலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது.
எனினும் ஏஞ்சிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டு காசாவில் நிரந்த போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி ஆரம்பிக்கப்படவில்லை. காசாவில் இன்னும் தொடர்ந்து 24 பணயக்கைதிகள் உயிருடனும் 39 பேர் மரணித்த நிலையில் அவர்களின் உடல்களும் இருப்பதாக நம்பப்படுகிறது.
போர் நிறுத்தம் காலாவதியாகி இருக்கும் நிலையில் காசாவில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. வடக்கு காசாவின் பெயித் ஹனூன் நகரில் இஸ்ரேலிய ஆளில்லா விமானத் தாக்குதலில் பலஸ்தீனர் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் ஒருவர் காயமடைந்ததாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாம் மற்றும் ஏனைய பகுதிகளில் இஸ்ரேலிய ஆளில்லா விமானங்கள் மற்றும் போர் விமானங்கள் தாழ்வாக வட்டமிட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விமானங்கள் முதல் நாளில் நோன்பு திறக்கும் நேரத்தில் காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2023 ஒக்டோபரில் ஆரம்பித்து சுமார் ஒன்றரை ஆண்டுகள் நீடித்த காசா போரில் 48,300க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட நிலையில் காசாவின் பெரும் பகுதி இடிபாடுகளாக மாற்றப்பட்டுள்ளது.
ஏற்கனவே உணவு மற்றும் அடிப்படை வசதிகளுக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலில் உதவிகள் முடக்கப்பட்டிருப்பது காசா மக்களிடையே மேலும் நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமையும்.