உள்நாடு

ஐசிசி 19 வயதின்கீழ் உலகக் கிண்ணத்தில் – இலங்கைக்கு முதலாவது தோல்வி

(UTV | கொழும்பு) –

தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சி குழுவில் இடம்பெறும் இலங்கை முதலாவது தோல்வியைத் தழுவியது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கிம்பர்லியில் நேற்று நடைபெற்ற போட்டியில் 6 விக்கெட்களால் இலங்கை தோல்வி அடைந்தது.

இலங்கை இதுவரை பங்குபற்றிய 3 லீக் போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியதுடன் 208 ஓட்டங்களையே (49.5 ஓவர்களில்) அதிகப்பட்ச மொத்த எண்ணிக்கையாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பெற்றது. இலங்கை துடுப்பாட்டத்தில் ஒவ்வொரு போட்டியிலும் யாராவது ஒரு வீரர் மாத்திரமே 50க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெறுகிறார். ஏனையவர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காதது இலங்கை அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது.

அவுஸ்திரேலியாவுடனான போட்டியிலும் தினுர கலுபஹன மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்தார். ஆரம்ப வீரர் புலிந்து பெரேரா தொடர்ந்து துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காததுடன் இன்றைய போட்டியில் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். அணித் தலைவர் சினேத் ஜயவர்தன (16), சுப்புன் வடுகே (17) ஆகிய இருவரும் மிகவும் நிதானத்துடன் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு ஓரளவு தெம்பை ஊட்டினர். தொடர்ந்து ரவிஷான் டி சில்வாவுடன் 4ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களையும் ருசந்த கமகேயுடன் 5ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களையும் தினுர கலுபஹன பகிர்ந்து அணியை ஒரளவு நல்ல நிலையில் இட்டார். ஆனால், இந்த மூவரும் 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

ரவிஷான் டி சில்வா 30 ஓட்டங்களையும் ருசந்த கமகே 10 ஓட்டங்களையும் பெற்றனர். தினுர கலுபஹன 78 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 64 ஓட்டங்களைப் பெற்றனர்.
மத்திய வரிசையில் ஷாருஜன் சண்முகநாதன் 21 ஓட்டங்களைப் பெற்று கடைசியாக ஆட்டம் இழந்தார். பந்துவீச்சில் கெலம் விட்லர் 28 ஓட்டங்களக்கு 3 விக்கெட்களையும் மாஹ்லி பியடமன் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டொம் கெம்பெல் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 48.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஹெரி டிக்சன் (49), சாம் கொன்ஸ்டாஸ் (23) ஆகிய இருவரும் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
எனினும், அவர்கள் இருவரைத் தொடர்ந்து மேலும் இருவர் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர். (129 – 4 விக்.)
ஆனால், ரெயான் ஹிக்ஸ், டொம் கெம்பெல் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். ரெயான் ஹிக்ஸ் 77 ஓட்டங்களுடனும் டொம் கெம்பெல் 33 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் விஷ்வா லஹிரு 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இந்தியாவின் டிஜிட்டல் அடையாள அட்டை நிறுவனத்துடன் – இலங்கை ஒப்பந்தம்!

புதிய ஆவணங்களுடன் யானைகளை பதிவு செய்ய நடவடிக்கை

உரங்களை வழங்க முறையான வழிமுறை