உள்நாடுசூடான செய்திகள் 1

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பு!

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டெனேகுரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது கூட்டத்தொடருடன் இணைந்து நேற்று (19) இந்த அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் பொறுப்புக்கூறல் அறிக்கைக்கு இதன்போது நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயர்ஸ்தானிகரின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக சம்பந்தப்பட்ட நாடுகளின் குழு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத ஒடுக்குமுறை மற்றும் இணைய பாதுகாப்பு தொடர்பாக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய சட்டங்கள் சகலரது கருத்து சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் உயர்பாதுகாப்பு வலயத்தில் காணி விடுவிப்புக்கு பாராட்டு தெரிவித்த அந்த நாடுகள் வடக்கு, கிழக்கில் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குமாறும் தெரிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானதுடன், எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Related posts

தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமைகள் தொடர்பான மாநாடு கொழும்பில்

ஜனாதிபதிக்கும் கட்சிக்கும் எதிராக செயற்படுவது மனிதநேயமற்ற செயல்

கடல்வாழ் முலையூட்டிகளைப் பார்வையிட அரசாங்கத்தின் அனுமதி அவசியம்