அரசியல்உள்நாடு

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – தென்னகோன் தலைமறைவாகாமல் சரணடைய வேண்டும் – அர்ஜூன மகேந்திரனை வெகுவிரைவில் நாட்டுக்கு அழைத்து வருவோம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

முன்னாள் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவாகாமல் வகித்த பதவியின் கௌரவத்துக்காக பொலிஸில் சரணடைய வேண்டும்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை வெகுவிரைவில் நாட்டுக்கு அழைத்து வருவோம் என அமைச்சரவை பேச்சாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த காலங்களில் எரிபொருள் விநியோகத்தில் அமுல்படுத்தப்பட்ட தவறான தீர்மானத்தை திருத்துவதற்கு எடுத்த தீர்மானத்துக்கு எதிராகவே எரிபொருள் விநியோகஸ்த்தர்கள் நேற்று முன்தினம் விநியோக நடவடிக்கைகளில் இருந்து விலகினார்கள்.

எரிபொருள் விநியோகத்தின் போது விநியோகஸ்த்தர்களுக்கு நூற்றுக்கு 3 சதவீதமளவில் மேலதிக தொகை வழங்கப்பட்டது.

எரிபொருள் விலை அதிகரித்த போதும், குறைவடைந்த போதும் இந்த தொகையை விநியோகஸ்த்தர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

இவ்வாறு மேலதிக தொகை வழங்கல் முறைக்கேடானது என்று பலமுறை குறிப்பிட்டப்பட்ட நிலையில் இந்த 3 சதவீத கொடுக்கலை நிறுத்துவதற்கு பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே விநியோகஸ்த்தர்கள் எரிபொருள் விநியோக நடவடிக்கையில் இருந்து விலகினார்கள்.

ஒருசில ஊடகங்களை இதனை பெரிதுப்படுத்தி, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற தவறான நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் ஏற்படுத்தின.

இதன் பின்னர் பொதுமக்கள் வழமைக்கு மாறாக எரிபொருளை கொள்வனவு செய்தார்கள்.

வழமைக்கு மாறாக இவ்விரு நாட்களில் அதிகளவில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆகவே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது.

எரிபொருள் விநியோகஸ்த்தர்கள் பொதுமக்களை அசௌகரியத்துக்குள்ளாக்குவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

முன்னாள் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனால் அவர் தற்போது தலைமறைவாகியுள்ளார்.வகித்த பதவிக்கு மரியாதையளித்தாவது அவர் பொலிஸில் சரணடைய வேண்டும்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் பிரதான நபரான அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.

அர்ஜூன மகேந்திரனை பாதுகாத்தவர்கள் இன்று ஏன் அவரை நாட்டுக்கு கொண்டுவரவில்லை என்று கேள்விகேட்பது வேடிக்கையாகவுள்ளது என்றார்.

Related posts

மேலும் 50,000 SputnikV தடுப்பூசிகள் நாட்டுக்கு

பாராளுமன்ற விசேட அமர்வு கூடியது

தாதியரின் சுகயீன விடுமுறை போராட்டம் தொடர்கிறது