வகைப்படுத்தப்படாத

எதிர்த் தரப்பினர் சிலர் உலகெங்கிலும் பிழையான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர – ஜனாதிபதி

(UDHAYAM, JAKARTA) – அரசாங்கம் தொடர்பாக அரசியல் எதிர்த் தரப்பினர் சிலர் இணையத்தளங்கள் மற்றும் ஊடகங்களின் வாயிலாக உலகெங்கிலும் பல்வேறு பிழையான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த போலிப் பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம் என தான் வெளிநாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்களிடம் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இந்தோனேசியா சென்றுள்ள ஜனாதிபதி இந்தோனேசியாவில் வாழும் இலங்கையர்களை நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

தாய் நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாத்து அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தி மீண்டுமொரு யுத்தம் நாட்டில் ஏற்படாத வகையில் அனைத்து மக்கள் மத்தியிலும் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவது தற்போதைய அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டமாகும் என்றும் குறிப்பிட்டார்.

இன்று இலங்கை குறித்தும் இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்தும் முழு உலகினதும் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த ஒத்துழைப்புடன் நாட்டின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை துரிதப்படுத்துவதாக ஜனாதிபதி கூறினார்.

இலங்கை அரச தலைவர் ஒருவருக்கு இந்தோனேசியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு 40 வருடங்களுக்கு பின்னர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய  ஜனாதிபதி, 44 வருடங்களுக்குப் பின்னர் ரஷ்ய அரசாங்கம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் தான் இன்னும் இரண்டு வாரங்களில் ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தோனேசிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்பை பாராட்டிய ஜனாதிபதி, வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக 5,000 மெட்றிக் தொன் அரிசியை இந்தோனேசியா அன்பளிப்பாக வழங்கியதிற்கு ஜனாதிபதி நன்றி கூறினார்.

இந்தோனேசியாவில் உள்ள இலங்கை தூதுவர் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. ஜனாதிபதியின்; வருகையை நினைகூருமுகமாக தூதுவர் அலுவலக வளாகத்தில் மரக் கன்று ஒன்றும் நடப்பட்டது.

Related posts

மோடியை நாளை சந்திக்கிறார் பிரதமர் ரணில்

Former Defence Secretary, IGP remanded [UPDATE]

திருமணம் செய்துகொள்வதற்கான சட்டபூர்வ வயதெல்லை 18 ஆக உயர்வு…