உலகம்

உக்ரைன் மீது தொடர் தாக்குதலால் ரஷியாவுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க ஜி-7 நாடுகள் ஆலோசனை

(UTV |  பெர்லின்) – கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள ‘ஜி-7’ அமைப்பின் உச்சி மாநாடு, ஜெர்மனியின் ஸ்குலோஸ் எல்மாவ் நகரில் நேற்று தொடங்கியது.

தொடர்ந்து இன்றும் மாநாடு நடைபெறுகிறது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். மாநாட்டில், பல்வேறு அமர்வுகளாக விவாதம் நடந்தது. உக்ரைன்-ரஷியா போர் முக்கிய இடம் பிடித்தது. 7 நாடுகளின் தலைவர்களும் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தனர்.

உக்ரைன்-ரஷியா போரால் பாதிக்கப்பட்டுள்ள எரிபொருள் வினியோகத்தை சீரமைப்பது, பணவீக்க உயர்வை கட்டுப்படுத்துவது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. எரிபொருளுக்கு விலை உச்சவரம்பு நிர்ணயிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதன்மூலம், ரஷியாவுக்கு லாபத்தை குறைக்க வியூகம் வகுக்கப்பட்டது.

பருவநிலை மாற்றம் பற்றியும் பேசப்பட்டது. உச்சி மாநாட்டின் ஆரம்பத்தில் உரையாற்றிய ஐரோப்பிய பேரவையின் தலைவர் சார்லஸ் மிச்சேல் பேசுகையில், உக்ரைன் மீதான ரஷியா முன்னெடுக்கும் போர் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த போர் உலகத்தையே ஆபத்திற்குள் தள்ளி உள்ளது. , இந்தப் போர் காரணமாக உணவு மற்றும் எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளது.

விலைகள் அதிகரித்துள்ளதுடன், உணவுப் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி இருக்கிறது. உக்ரைனுக்கு ஆதரவு வழங்கும் விஷயத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் ஜி 7 நாடுகளும் அசையாத ஒற்றுமையுடன் இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்கு நிதி, மனிதாபிமான மற்றும் அரசியல் ஆதரவை தொடர்ந்து வழங்கும் என்றார். மாநாட்டிற்கு முன்னதாக ஜேர்மன் சான்ஷிலர் ஓலாப் ஸ்சொட்ஸ்சை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்து கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசுகையில், உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மேற்கு உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும். நேட்டோவும் ஜி 7 நாடுகளும் பிளவுபடும் என ஆரம்பத்தில் இருந்தே விளாடிமிர் புதின் எண்ணிக்கொண்டிருக்கிறார். ஆக்கிரமிப்பு செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல அனுமதிக்கக்கூடாது என்றார். இதனிடையே ஜி 7 மாநாட்டில் ரஷிய தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான தடை பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனிலிருந்து கோதுமை ஏற்றுமதியைத் தடுக்க ரஷியா முயல்வதால், பணவீக்கத்தை அதிகரித்து, உலகளாவிய உணவுப் பற்றாக்குறை குறித்த அச்சத்தைத் தூண்டிய போரை முடிவுக்குக் கொண்டுவர அழுத்தத்தை எவ்வாறு அதிகரிப்பது என்று ஜி 7 தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். இதனிடையே பிரிட்டன், கனடா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் ரஷியத் தங்க ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளன.

அந்தத் தடையால் ரஷியாவில் அரசியல் செல்வாக்குள்ள பெருஞ்செல்வந்தர்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவர் என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார். உலக அளவில் தங்க வர்த்தகத்தில் லண்டனுக்கு முக்கிய பங்கு உண்டு. அதனால் தடையின் தாக்கம் உலகம் முழுவதும் உணரப்படும் என்று பிரிட்டன் குறிப்பிட்டுள்ளது. ரஷியாவின் பெரிய ஏற்றுமதிகளில் தங்கம் பிரதானமானது.

சென்ற ஆண்டு ரஷியத் தங்க ஏற்றுமதியின் மதிப்பு சுமார் 15.5 பில்லியன் டாலர். ரஷியா மீது கடுமையான தடைகள் விதிக்கப்பட்டுள்ளதால், நிதிக் கட்டுப்பாடுகளின் தாக்கத்தைத் தவிர்க்க அங்குள்ள செல்வந்தர்கள் தங்கள் சொத்துகளைத் தங்கத்திற்கு மாற்றி வருகின்றனர். இந்த சூழலில் ஜெர்மனியில் நடைபெறும் ஜி 7 உச்சி மாநாட்டில் ரஷிய தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான தடை பற்றி அறிவிப்புகள் வெளியாகும் என்ற தகவல் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே ஜி 7 மாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று நேற்று முன்தினம் பிரதமர் மோடி ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்றார்.

நேற்று ஜெர்மனியின் முனிச் நகரை அடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு இந்திய தூதரும், இந்திய வம்சாவளியினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். முனிச் நகரை அடைந்தவுடன் பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஜி 7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க முனிச் நகரை வந்தடைந்தேன். உலக தலைவர்களுடன் ஆக்கபூர்வமான விவாதம் நடத்த ஆர்வமாக இருக்கிறேன். பருவநிலை மாற்றம், எரிசக்தி, உணவு பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, சுற்றுச்சூழல், பாலின சமத்துவம், ஜனநாயகம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

பிரதமர் மோடி, பிற நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துவார் என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியுள்ளார். இன்றைய மாநாட்டில், பருவநிலை மாற்றம், சுகாதாரம் ஆகியவை தொடர்பான ஒரு அமர்விலும், உணவு பாதுகாப்பு, பாலின சமத்துவம் ஆகியவை தொடர்பான ஒரு அமர்விலும் பிற தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். முன்னதாக வரவேற்பு நிகழ்வின்போது இந்தியர்களுடன் மோடி உரையாடினார்.

பிரதமருடன் அவர்கள் ‘செல்பி’ புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்.

Related posts

வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்

நியூசிலாந்து தாக்குதல்: சூத்திரதாரிக்கு ஆயுள் தண்டனை

மற்றுமொரு கொடிய நோய் குறித்து WHO எச்சரிக்கை