2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து அமெரிக்காவின் FBI விசாரணை அறிக்கையை இலங்கை மறுத்தால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோபமடைந்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.
பிரபல இசைக் கலைஞர் இராஜ் வீரரத்ன மற்றும் SLPP அரசியல்வாதி மிலிந்த ராஜபக்ஷவுடனான நேர்காணலில் பேசிய ரணில், FBI விசாரணையில் ஸஹ்ரான் ஹாஷிம் தாக்குதல்களின் மூளையாக இருந்தவர் என உறுதிப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
இலங்கை வேறு கருத்தை முன்வைத்தால், அது ட்ரம்பை கோபப்படுத்தலாம் என்றும், இதனால் அவர் உயர்ந்த வரிகளை விதிக்கலாம் அல்லது உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கிக்கு நேர்ந்தது போன்ற இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும் ரணில் கூறினார்.
ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தன்னுடன் நேரடியாக தொலைபேசியில் உரையாடி, FBI உதவியை வழங்கியதாக ரணில் நினைவு கூர்ந்தார்.
“நான் அமெரிக்க தூதரகத்தை தொடர்பு கொண்டபோது, FBI குழு ஏற்கனவே இலங்கைக்கு வந்திருந்தது. பின்னர் ட்ரம்ப் என்னுடன் பேச விரும்புவதாக அறிவிக்கப்பட்டு, நாங்கள் உரையாடினோம்.
அவர் FBI உட்பட முழு உதவியையும் வழங்கினார். பின்னர் நடந்த கூட்டத்தில் அமெரிக்க தூதர் மற்றும் FBI முகவர் ஒருவரும் பங்கேற்றனர். இங்கிலாந்தின் ஸ்கொட்லாந்து யார்டும் உதவி வழங்கியது,” என்று அவர் கூறினார்.
அமெரிக்க முகவர் ஒருவர் விசாரணையில் ஈடுபட்டிருந்தபோது, அப்போதைய ட்ரம்ப் ஆட்சியில் நீதிமன்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும் ரணில் தெரிவித்தார்.
“இப்போது ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக இருக்கிறார். ஸஹ்ரான் ஹாஷிம் தாக்குதலின் மூளையாக இருந்ததாக FBI அறிக்கை கூறுகிறது.
இதை மறுத்தால் என்ன நடக்கும்? ட்ரம்பை கோபப்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் உங்களுக்கு தெரியும். நாம் எதையும் செய்ய முடியாது.
இலங்கையில் உள்ள ஒருவரை கோபப்படுத்துவதா அல்லது ட்ரம்பை கோபப்படுத்துவதா என்பதை நாம் தெரிந்து செயல்பட வேண்டும். FBI அறிக்கை என்னிடம் உள்ளது, அதில் உண்மை இருக்கிறது.
இதில் மோதல் வேண்டாம். இது உக்ரைன் ஜனாதிபதிக்கு நேர்ந்தது போன்ற சம்பவத்தையோ அல்லது வரி உயர்வையோ ஏற்படுத்தலாம்,” என்று ரணில் எச்சரித்தார்.