சூடான செய்திகள் 1

இலங்கையின் தொழில்நுட்பக் கல்லூரிகள் இளைஞர்களுக்கு உலக சந்தையுடன் போட்டியிடக்கூடிய வகையில் திறன்களை வழங்குகிறது – அமைச்சர் ரிஷாட்

(UTVNEWS|COLOMBO) – ‘இலங்கையின் தொழிற்பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு ஒரு சிறந்த தொழில்நுட்பக் கல்லூரியாக கம்பஹா தொழில்நுட்பக் கல்லூரி தனது பயணத்தினை ஆரம்பிக்கப் போகிறது. இது குறிப்பாக கம்பஹா மாவட்ட . இளைஞர்களுக்கான சிறந்த மையமாகவும் ஒரு திருப்புமுனையாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என கைத்தொழில் மற்றும் வர்த்தகம், இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தல், கூட்டுறவு மேம்பாடு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் பயிற்சி அமைச்சரான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கடந்த வாரம் கம்பஹா தொழில்நுட்பக் கல்லூரி திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரிஷாட் இதனை தெரிவித்தார்.

இவ் வைபவத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரன, அமைச்சின் செயலாளர் கே.டி.என்.ரஞ்சித் அசோகா, திறன் மேம்பாடு மற்றும் தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதனா, மற்றும் இலங்கை தொழில் பயிற்சி நிறுவனத்தின் தலைவர் ரவி ஜெயவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து இவ் வைபவத்தில் அமைச்சர் உரையாற்றுகையில்: ‘தென் கொரிய அரசாங்கத்தின் இப் பாரிய ஆதரவானது இலங்கை தொழில்நுட்பக் கல்விக்கு ஓரு திருப்புமுனையாக அமைகின்றது. ஏனெனில் இது இளம் மாணவர்களுக்கு அவர்களின் உயர் கல்வியைச் செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. அத்துடன் கொரியா இத்திட்டத்திற்கு பணத்தை மட்டுமல்ல, அதிநவீன தொழில்நுட்ப திறன்களையும் வழங்கியுள்ளது. இந்த அனைத்து ஆதரவிற்கும் கொரியாவுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்.

தென் கொரிய தொழில்நுட்பத்துடன் 4.64 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில், கட்டப்பட்ட இந்த கட்டிட தொகுதி புதிய நிர்வாக கட்டிடம், விரிவுரையாளர்கள் மற்றும் பயிற்றுநர்களுக்கான பணியாளர்கள் குடியிருப்பு மற்றும் நன்கு பொருத்தப்பட்ட பட்டறைகள் ஆகியவற்றை கொண்டுள்ளது.

க.பொ.த உயர்தரத்தில் சித்திபெற்ற ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே பல்கலைக்கழகங்களில் நுழைகிறார்கள், பல்கலைக்கழகங்களுக்குள் நுழையாத பலர், இந்த தொழிற்பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழிற்பயிற்சி கல்லூரிகளில் சேர்கின்றனர். 400 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிகள் தற்போது இந்த அமைச்சின் கீழ் நடத்தப்படுகின்றன. இந்த பயிற்சி மையங்களின் கற்கை நெறிகள் கொரிய பேராசிரியர்களின் மேற்பார்வையில் நடத்தப்படுகின்றன. பயிற்சி முடிவில் வழங்கப்படும் தேசிய தொழில் தகுதி சான்றிதழ் (National Vocational Qualification) சிங்கப்பூர், அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு தொழில்நுட்ப பயிற்சி, தொழில்துறை பயிற்சி போன்ற சில கற்கைநெறிகளும் இதில் அடங்கும். இந்த மையத்தில் உள்ள அனைத்து புதிய தொழில்நுட்ப கற்கைநெறிகளும், கொரிய நிபுணர்களால் திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்ட கற்கைநெறிகளாகும்.

மேற்குறிப்பிட்ட சான்றிதழ் மற்றும் டிப்ளோமா படிப்புகளை வெற்றிகரமாக முடித்த மாணவர்கள், உள்நாட்டிலும், சிங்கப்பூர், அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில், நல்ல ஊதியம் பெறும் வேலைகளைப் பெறலாம். மேற்படி தொழில்நுட்பக் கல்லூரிகளும் மற்றைய எல்லா மாவட்டங்களிலும் காணப்படுகின்றது. தொழிற்பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சின் கற்கை நெறிகளானது அரசாங்கத்தால் வழங்கப்படும் நிதி ஆதரவு , உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொடர்பு வசதிகளுடன் இலங்கை முழுவதிலும் செயல்படுத்தப்படுகின்றன.

தற்போது, தொழில்நுட்ப கல்லூரி முறைமையில் சுமார் 35000 மாணவர்கள், பல்வேறு கற்கை நெறிகளினை கற்கின்றனர். இந்த கற்கை நெறிகளின் நோக்கமானது நமது இளைஞர்களுக்கு உலக சந்தையுடன் போட்டியிடக்கூடிய வகையில் திறன்களை வழங்குவதாகும். இதுபோன்ற சர்வதேச ஒத்துழைப்புகள், எங்கள் திறன்கள் மற்றும் தொழில் மேம்பாட்டுத் துறைகளைத் தொடர்ந்து மேம்படுத்தும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

எந்தவொரு நாட்டினதும் தொழில் பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் தொழிலாளர் உற்பத்தித்திறன் ஆகியவற்றுக்குமிடையிலான வலுவான உறவை நாம் அனைவரும் அறிவோம். இவ்வாண்டும் திறனை பொறுத்தவரை உலகளாவிய தரவரிசையை இலங்கை மீண்டும் வெற்றிகரமாக தக்க வைத்துக் கொண்டது.

2019 குளோபல் டேலண்ட் போட்டித்திறன் குறியீட்டில், நாங்கள் 82 வது இடத்தில் உள்ளோம், எந்த மாற்றமும் இல்லாமல் 2017 முதல் அதே நிலையில் தொடர்கிறோம். இந்தியாவைத் தவிர, தெற்காசிய நாடுகளை விட இலங்கை உயர்ந்த இடத்தில் உள்ளது. இந்த மாறாத தரவரிசை நமது தேசிய திறன் மேம்பாட்டு முயற்சிகள் செயல்படுவதைக் காட்டுகிறது. உலகெங்கிலும், சேவை ஏற்றுமதியும் கடந்த சில ஆண்டுகளில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. அதேபோல் இலங்கையின் சேவை ஏற்றுமதியும் வளர்ச்சியடைந்து வருகிறது. நல்ல திறன் பயிற்சி இந்த துறையை விருத்தியடைய உதவும்;’என்றார் அமைச்சர் ரிஷாட்

ஊடகப்பிரிவு

Related posts

தபால் மூல வாக்களிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியும்

இணைய பண பரிமாற்ற மோசடி தொடர்பில் அவதானம்

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு…