சவூதிக்கும் இலங்கைக்கும் இடையில் பல துறைகளை சார்ந்த 9 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை நிர்மாணிக்கப்பட்டு பல ஆண்டுகளாக மக்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் 500 சவூதி வீட்டுத்திட்டத்தை கூடிய விரைவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைக்குமாறு இலங்கைக்கான சவூதி தூதுவர் காலித் ஹமூத் நாசர் அல்தாசம் அல்கஹ்தானி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கான சவூதி தூதுவர் காலித் ஹமூத் நாசர் அல்தாசம் அல்கஹ்தானி வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேராத்தை சந்தித்து கலந்துரையாடியபோதே மேற்குறிப்பிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் சவூதி வீட்டுத்திட்டம் குறித்து பேசப்பட்டது.
சுனாமி பேரழிவில் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு சவூதி அரசாங்கம் ஆயிரம் வீட்டுத்திட்டத்தை ஆரம்பித்து, அதன் முதல் கட்டமாக 500 வீடுகளும் பாடசாலை, பஸ் தரிப்பிடம் மற்றும் விளையாட்டு மைதானம் என பூரண வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பணிகள் முடிவடைந்து பல ஆண்டுகளை கடந்துள்ளன.
ஆனால், இதுவரையில் அந்த வீடுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வில்லை.
இறுதியில் நீதிமன்றம் குறித்த வீடுகளை இன விகிதாசார அடிப்படையில் வழங்குமாறும் அதன் பிரகாரம் 70 வீதம் முஸ்லிம்களுக்கும் ஏனையவர்களுக்கு 30 வீதமும் வழங்குமாறு தீர்ப்பளித்திருந்தது. எனவே இந்த வீடுகளை கால தாமதமின்றி மக்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு, துறைசார் நிபுணத்துவம் கொண்ட பணியாளர்களை சவூதிக்கு உள்வாங்குதல் மற்றும் இருதரப்பு தொழில்துறை வளர்ச்சி போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இதன் அடிப்படையில் சவூதிக்கும் இலங்கைக்கும் இடையில் 9 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.